/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொத்தட்டை டோல்கேட்டில் வரும் 23ம் தேதி முதல் கட்டணம்... வசூல்; உள்ளூர் வாகனங்களுக்கு வசூலிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
/
கொத்தட்டை டோல்கேட்டில் வரும் 23ம் தேதி முதல் கட்டணம்... வசூல்; உள்ளூர் வாகனங்களுக்கு வசூலிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கொத்தட்டை டோல்கேட்டில் வரும் 23ம் தேதி முதல் கட்டணம்... வசூல்; உள்ளூர் வாகனங்களுக்கு வசூலிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கொத்தட்டை டோல்கேட்டில் வரும் 23ம் தேதி முதல் கட்டணம்... வசூல்; உள்ளூர் வாகனங்களுக்கு வசூலிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : டிச 18, 2024 07:39 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை சுங்கச் சாவடியில் வரும் 23ம் தேதி முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. உள்ளூர் வாகனகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை 194 கி.மீட்டர் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற 2012ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்காக ரூ.6,431 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் ஜானகிபுரம் கூட்டுச்சாலையில் இருந்து துவங்கி விழுப்புரம், வளவனுார், கண்டமங்களம், புதுச்சேரி, அரியாங்குப்பம், கடலுார், ஆலப்பாக்கம், புதுச்சத்திரம், சிதம்பரம், சீர்காழி, தரங்கபாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டிணம் செல்கிறது.
நான்கு வழிச்சாலை பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது. சாலை விரிவாக்கப்பணிகள், ஏராளமான உயர்மட்ட பாலங்கள், கல்வெர்ட் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் வாகனங்கள் சென்று வருகிறது.
பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அமைக்கப்பட்டாலும் இதுவரை சுங்கச்சாவடி திறக்கப்படாததால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.
இந்நிலையில் வரும் 23ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கொத்தட்டை சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டுள்ளது.
கொத்தட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் என்ற விபரங்கள் வைக்கப்படவில்லை. சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் கட்டண விபரங்கள் எழுதி வைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையில், சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்கவேண்டும், விழுப்புரம்-நாகப்பட்டிணம் நான்கு வழிச்சாலை பணிகள் முழுவதும் முடிந்தவுடன் சுங்கச்சாவடியை திறந்து வசூலிக்க வேண்டும், 50 கி.மீட்டர் வரை உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ம் தேதி கொத்தட்டை சுங்கச்சாவடி அருகே சாலை மறியில் போராட்டம் நடத்த மா.கம்யூ., கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.