/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரத்தில் தினமும் குவியும் சுற்றுலா பயணிகள்
/
பிச்சாவரத்தில் தினமும் குவியும் சுற்றுலா பயணிகள்
ADDED : அக் 13, 2024 07:49 AM

கிள்ளை : பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்து, செல்கின்றனர்.
சிதம்பரத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்கு, 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காட்டில் இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவில் இந்த சுற்றுலா மையம் சிறப்பு வாய்ந்தது. 20 வகையான சுரப்புண்ணை தாவரங்கள், 18 வகையான மூலிகை தாவரங்கள் உள்ளது.
மேலும், 4 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கால்வாய்கள், ஒரே மாதிரியாக இருப்பது வியப்பாக இருக்கும். இதனால்,பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வனப்பகுதிக்கு சென்று வர, பிச்சாவரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், இயந்திர படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகில் வனப்பகுதியை சுற்றிப்பார்க்க காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
வனப்பகுதிக்கு படகில் செல்ல முடியாதவர்கள், சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி, மாங்குரோவ்ஸ் தாவரங்களை கண்டு ரசிக்கின்றனர்.
இதுகுறித்து, பிச்சாவரம் சுற்றுலா மேலாளர் பைசல் அகமது கூறுகையில், ஆன்லைன் மூலம் புக்கிங் செய்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முன்பதிவு செய்த நேரத்திற்கு 20 நிமிடத்திற்கு முன்பு வந்தால் போதுமானது என, தெரிவித்தார்.