/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆன்லைன் புக்கிங் பயன்படுத்த சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு! கூட்ட நெரிசலை தவிர்க்க பிச்சாவரத்தில் ஏற்பாடு

ADDED : ஏப் 05, 2025 05:25 AM

கிள்ளை: பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகளுக்கு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் புக்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற வனச்சுற்றுலா மையத்தில் மாங்குரோவ்ஸ் எனும் சுரபுண்ணை தாவரங்கள் மற்றும் பல்வேறு மூலிகை தாவரங்கள் உள்ளன. இதனால், உள்ளூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்கின்றனர்.
குறிப்பாக, பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வனக்காடுகளை சுற்றி பார்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், இயந்திர படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் இயக்கப்படுகிறது.
படகு சவாரி செய்ய வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க மணிக்கணக்கில் காத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் நேரம் விரயமாகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதனை தவிர்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி செய்ய ஆன் லைன் புக்கிங் செய்ய கியூ. ஆர்., கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலா மைய மேலாளர் பைசல் அகமது கூறுகையில், 'தற்போது, கோடைகாலம் துவங்க உள்ளதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கு ஆன் லைன் புக்கிங் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பதிவு செய்த நேரத்திற்கு 20 நிமிடத்திற்கு முன்பு பிச்சாவரத்திற்கு வந்தால் போதுமானது' என்றார்.