ADDED : ஜூன் 22, 2026 03:24 AM

சேத்தியாத்தோப்பு: வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, கடலுார் வேளாண் துணை இயக்குனர் அமிர்தராஜ் தலைமை தாங்கி, விளைநிலம் காப்போம், இயற்கை வேளாண் முக்கியத்துவம், பசுந்தாள் உரபயிர்கள் பயன்கள், நீர் மேலாண்மை, அங்கக சான்று பெறுவதற்கான நடைமுறை பற்றி பேசினார்.
வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் பங்கேற்று உயிர் உரங்கள், நெல் நுண்ணுாட்ட கலவை பயன்படுத்தும் முறைகள் அதன் பயன்கள், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சத்தியநாராயணன் பங்கேற்று மண்மாதிரி சேகரிக்கும் முறை, மண்ணின் தன்மை, மண் சத்துக்கள் மற்றும் நெற்பயிர்களை தாக்கும் இலைபேன் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினார்.
வேளாண்துணை அலுவலர் பாலசரவணன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வழங்கும் இடுபொருட்கள் மற்றும் வேளாண் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினார்.
இதில் எறும்பூர், நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, ஆணைவாரி, மதுவானைமேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை தொழில்நுட்ப உதவி மேலாளர் இளையராஜா செய்திருந்தார், தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி நன்றி கூறினார்.
