UPDATED : செப் 06, 2026 05:24 PM
ADDED : செப் 06, 2026 05:22 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் கடைவீதியில் பயணிகளுக்கு நிழல் தந்த மரத்தை, வெட்டி அகற்றியதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலத்தில் கடைவீதி பஸ் நிறுத்தம் வழியாக ஜெயங்கொண்டம், பெண்ணாடம், திட்டக்குடி, பெரம்பலுார் மார்க்கமாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பிரதான சாலையில் பெரு வணிக நிறுவனங்கள், நகராட்சி அலுவலகம், வங்கிகள் உள்ளன. ஆனால், நிழற்குடை வசதியின்றி பயணிகள் மழை, வெயில் காலங்களில் கடைகளில் தஞ்சமடையும் அவலம் தொடர்கிறது.
இதையடுத்து, கடைவீதி சாலை இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்தபோது பொது மக்கள், பயணிகள் பயனடையும் வகையில் நிழல் தரும் புங்கன் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது, மரங்கள் வளர்ந்து நிழல் தரும் வகையில் உள்ளதால், வெயில் காலங்களில் பாதசாரிகள் பலரும் இளைப்பாறி வருகின்றனர்.
இந்நிலையில், பஸ் நிறுத்தம் எதிரே உள்ள பயணிகள் இளைப்பாறிய புங்கை மரத்தின் கிளைகளை சிலர் வெட்டி அகற்றி உள்ளனர். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் நின்று கூட இளைப்பாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
