மாவட்டத்தில் 'தேசிய விவசாய அடையாள எண்' பெறுவதில் சிக்கல்!வருவாய்த்துறை ஒத்துழைப்பின்மையால் விவசாயிகள் கவலை
மாவட்டத்தில் 'தேசிய விவசாய அடையாள எண்' பெறுவதில் சிக்கல்!வருவாய்த்துறை ஒத்துழைப்பின்மையால் விவசாயிகள் கவலை
UPDATED : செப் 29, 2026 06:35 PM
ADDED : செப் 29, 2026 06:33 PM
பெண்ணாடம்:மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்ட சலுகைகளை பெற 'தேசிய விவசாய அடையாள எண்' பதிவு செய்ய வருவாய்த்துறை ஒத்துழைப்பின்மையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை எளிதில் பெறும் வகையில், வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் அனைத்துத் தகவல்களையும் டிஜிட்டல் தரவுகளாக பதிவு செய்ய, விவசாயிகள் நில உரிமை பதிவேடு (பார்மர் ரிஜிஸ்டர்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, வருவாய் கிராமங்கள் தோறும் அரசு சார்பில் முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நில உடைமை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து, ஆதார் போன்று, விவசாயிகளுக்காக பிரத்யேக அடையாள எண்ணை உருவாக்கும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'விவசாயிகள் பதிவேடு' அல்லது 'அக்ரி - ஸ்டாக்' எனப்படும் இத்திட்டத்தில் பதிவு செய்வதன் வாயிலாக, விவசாயிகள் பல்வேறு அரசுத் துறைகளின் நலத்திட்டங்களை எளிதில் பெற முடியும்.
ஒவ்வொரு முறையும் விவசாயிகள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. உரிய பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய முடியும். விவசாயிகள் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்தால், முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்காக மாவட்டத்தில் உள்ள கடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, அண்ணாகிராமம், புவனகிரி, விருத்தாசலம், மங்களூர், நல்லுார், ஸ்ரீமுஷ்ணம், கீரப்பாளையம், கம்மாபுரம், சிதம்பரம் உட்பட 14 வேளாண் வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களில் சிறப்பு முகாம், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வேளாண் வணிகம், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள், பண்ணை மகளிரை கொண்டு பதிவு பணி நடந்தது.
ஆனால் மாவட்டத்தில் இதுவரை 60 முதல் 65 சதவீதம் வரையிலும், திட்டக்குடி தாலுகா, நல்லுார் மற்றும் மங்களூர் வட்டாரத்தில் 60 சதவீத விவசாயிகள் பதிவு நடந்துள்ளது. விவசாயிகளின் தரவுகளை அவர்களின் மொபைல் எண்ணுடன் பதிய ஒருவருக்கு சராசரியாக 30 நிமிடமும், சர்வர் உள்ளிட்ட சிக்கல்களால் 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.
மேலும், பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் பூர்வீக சொத்துக்கள் கூட்டு பட்டாவாக உள்ளதால் தேசிய விவசாய அடையாள எண் பதிவில் பதிய மறுப்பது, வருவாய்த் துறையின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பி.எம்., கிசான் நிதி, வரும் காலத்தில் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் இந்த தரவு தளம் மற்றும் விவசாய அடையாள எண் அடிப்படையிலேயே வழங்கப்பட உள்ளது. அடையாள எண் இதுவரை பெறாத விவசாயிகள் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மாவட்டத்தில் 'தேசிய விவசாய அடையாள எண்' பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை நீக்கி பணிகளை விரைவு படுத்த மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நல்லுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கீதா கூறியதாவது; 'நல்லுார் வட்டாரத்தில் தேசிய அடையாள எண் பெறுவதற்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த பகுதி வேளாண் அலுவலங்களில் பதிவு செய்யலாம். வருவாய்த்துறை மூலம் நில ஆவணங்களை காண்பித்து பதிவு செய்ய வேண்டும். ஒரு சில நேரங்களில் சர்வர் பிரச்னை ஏற்படுகிறது.
வருவாய்த்துறையைச் சேர்ந்த சில வருவாய் ஆய்வாளர்கள் பதிவு செய்ய தெரியாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் மானியம் பெறுவது, வேளாண் பொறியியல் துறை சார்பில் இயந்திரங்கள் பெற முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைவதாக புகார் எழுந்துள்ளது.
அதனை சரி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், துணை வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொண்டு 'தேசிய விவசாய அடையாள எண்' பெற பதிவு செய்து கொள்ளலாம். நல்லுார் வட்டாரத்தில் இதுவரை 60 சதவீதம் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்' என்றார்.
