த.வெ.க., அரசு 5 ஆண்டுகள் தொடர வேண்டும்: திருமாவளவன் விருப்பம்
த.வெ.க., அரசு 5 ஆண்டுகள் தொடர வேண்டும்: திருமாவளவன் விருப்பம்
ADDED : ஜூன் 18, 2026 07:45 AM
சிதம்பரம்: தமிழகத்தில் த.வெ.க., அரசு 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே என் நிலைப்பாடு என, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் அவர் கூறியதாவது:
சிதம்பரம் அடுத்துள்ள பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் பாதிப்பு அதிகமாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினருக்கு வி.சி.., கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இத்திட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் அனுமதிக்க கூடாது.
தேர்தல் முடிவு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி போட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய், மதசார்பின்மைக்கு ஆதரவாக இருப்பதால், நாங்கள் அவரை ஆதரிக்கிறோம். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கடன் குறித்து, தி.மு.க., தான் பதில் சொல்ல வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி அறிக்கையில், விவசாயிகள் திருப்தி அடையவில்லை.
கூட்டணி ஆட்சியில் உடன்பாடு ஏற்பட்டு எங்களுக்கும் அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார். எங்களுக்கு அழைப்பு விடுத்ததால் நாங்களும் உடன் இருக்கிறோம். அ.தி.மு.க., கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே நான் சொல்லி இருக்கிறேன்.
திராவிட அரசியல் நீர்த்துபோக வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் பா.ஜ.,வுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. அ.தி.மு.க., பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அந்தக் கட்சியில் இருந்து சிலர் பதவி விலகுவது மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. ஆனால் நெருக்கடிகளை த.வெ.க., தான் செய்கிறது என்கின்றனர். ஆனால் அவர்கள் அதை மறுக்கின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. நாங்கள் சில இடங்களை வென்றிருந்தாலும், 100 க்கும் மேற்பட்ட இடங்களை த.வெ.க., பிடித்துள்ளது. இந்த அரசு 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. நான் எந்த தடுமாற்றத்தோடும் இல்லை. அண்ணாமலை அமைப்பு, பா.ஜ., தயாரித்து அனுப்பியதாக பார்க்க முடிகிறது.
தமிழகத்தில் குழந்தை பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை தடுக்க தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
