UPDATED : நவ 11, 2026 01:02 AM
ADDED : நவ 11, 2026 01:00 AM
பெண்ணாடம்: பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும் என வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில், பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியாகவும், வருவாய் குறுவட்ட தலைமையிடமாகவும் உள்ளது. இங்குள்ள, 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அதிகளவு சாதாரண, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
சில ஆண்டுகளாக பேரூராட்சி எல்லையில் புதிதாக நகர் பகுதிகள் உருவாக்கப்பட்டு குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பேரூராட்சி வார்டுகளில் உள்ள வடிகால் வசதிகள் போதுமானதாக இல்லை. மழை காலங்களில் பல இடங்களில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன் மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் முறையாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
பல வார்டுகளில் கழிவுநீர் வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டு துார்ந்துள்ளதால் மழை காலங்களில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
எனவே, பெண்ணாடம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும் என வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
