/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திறக்கப்படாத பயணிகள் நிழற்குடை :அரசு பணம் வீண்
/
திறக்கப்படாத பயணிகள் நிழற்குடை :அரசு பணம் வீண்
ADDED : ஜூலை 10, 2025 12:42 PM

நெல்லிக்குப்பம்: புதிய முறையில் கழிவறையுடன் கூடிய பயணிகள் நிழற்குடை கட்டியும் திறக்காமல் பாழாகிறது.
தமிழகம் முழுவதும் பயணிகள் வசதிக்காக பஸ் நிற்கும் இடங்களில் பயணிகள் நிழற்குடைகள் கட்டுவது வழக்கம்.இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.பஸ்க்காக காத்திருக்கும் நேரத்தில் மழை வெய்யிலில் இருந்து தப்பிக்க நிழற்குடைகள் பயனுள்ளதாக இருக்கிறது.ஆனால் பயணிகள் அவசர தேவைக்கு கழிவறை வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமபடும் நிலை உள்ளது.
இதை தவிர்க்க இனி கட்டப்படும் பயணிகள் நிழற்குடையுடன் கழிவறையையும் சேர்த்து கட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி கடலூர் மடப்பட்டு சாலை விரிவாக்கத்தின் போது வெள்ளகேட்,மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி உட்பட பல இடங்களில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக இரண்டு கழிவறைகளை கட்டினர்.அங்கு தண்ணீர் வசதியும் செய்தனர்.
இந்த கழிவறையுடன் கூடிய பயணிகள் நிழற்குடையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் இதுவரை ஒரு இடத்தில் கூட அவை பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்கபடாததால் பாழாகி வருகிறது.அரசின் நல்ல திட்டம் அதிகாரிகளின் அலட்சியத்தால் பயன்படாமலேயே பாழாகிறது.