டிராக்டர் மீது வேன் மோதி விபத்து விறகு கட்டைகள் சரிந்து 4 பேர் பலி
டிராக்டர் மீது வேன் மோதி விபத்து விறகு கட்டைகள் சரிந்து 4 பேர் பலி
ADDED : ஜூலை 06, 2026 02:47 AM

பண்ருட்டி: கடலுார் மாவட்டம், பண்ருட்டி, கீழக்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர், டிராக்டரில் விறகு ஏற்றிக்கொண்டு, பண்ருட்டி நோக்கி சென்றார். நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், பண்ருட்டி அடுத்த, பனிக்கன்குப்பம் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் சவுக்கு மரம் வெட்டும் பணிக்காக, குறிஞ்சிப்பாடி அருகே, ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள், 11 பேரை ஏற்றிக்கொண்டு வந்த, மினி வேன், டிராக்டர் மீது மோதியது.
விபத்தில், டிராக்டரில் இருந்த விறகு கட்டைகள், வேன் மீது சரிந்து விழுந்தது. மினி வேனில் இருந்த தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, விறகு கட்டைகளுக்குள் சிக்கியிருந்த, 12 பேரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை செல்லும் வழியில், ஆயிப்பேட்டையை சேர்ந்த ராணி, 60, ரவி, 58, ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
கடலுார் அரசு மருத்துவமனையில் காந்திமதி, 55, வெங்கடாம்பேட்டை சேர்ந்த சத்யா, 32, ஆகிய இருவர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த, எட்டு பேர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
காடாம்புலியூர் போலீசார், கீழக்குப்பத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முருகவேல், 52, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், முருகன் இருவரும், பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் தங்கி, பேக்கரியில் வேலை பார்த்தனர். நேற்று இரவு இருவரும், வல்லாபுரம் பிரிவு சாலையை கடக்க முயன்ற போது, கார் மோதியதில் உயிரிழந்தனர்.
அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, பைக் மீது லாரி மோதியதில், களரம்பட்டியைச் சேர்ந்த திருநீலகண்டன், 58, உயிரிழந்தார்.
புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா, 19, சபீர், 19, ஆகிய இருவரும் பைக்கில் சென்றபோது, பூலாம்பட்டி அருகே சாலையோர மரத்தில் மோதி, இருவரும் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்தவர் பாண்டியன், 35. இவரது மனைவி அனுசுயா, 33. இருவரும், நேற்றுமுன்தினம் இரவு, பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, டிப்பர் லாரி, மோதியதில், இருவரும் உயிரிழந்தனர்.
