/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாபாஜி கோவிலில் துணை ஜனாதிபதி தரிசனம்
/
பாபாஜி கோவிலில் துணை ஜனாதிபதி தரிசனம்
ADDED : ஜன 30, 2024 06:43 AM

கடலுார், : பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது குடும்பத்தினருடன் நேற்று தரிசனம் செய்தார்.
புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக வந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், கடலுார் மாவட்டம் புவனகிரி அடுத்த பரங்கிப்பேட்டைக்கு நேற்று காலை சென்றார். அங்குள்ள பாபாஜி கோவிலில் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
பாபாஜி வரலாறு குறித்தும், கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தார். கோவில் நிர்வாகம் சார்பில், துணை ஜனாதிபதிக்கு சித்தர் பாடல் புத்தகம் மற்றும் பாபாஜி படத்தை, பாபாஜியின் நேரடி சீடர் யோகி ராமையா வழங்கினார்.
முன்னதாக, கிரியா பாபாஜி யோகா சங்க தலைவர் வெங்கட் சுப்பிரமணியன், பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் ஆகியோர் பூங்கொத்து அளித்து துணை ஜனாதிபதியை வரவேற்றனர்.
தல சிறப்பு என்ன?
பரங்கிப்பேட்டை பாபாஜியும், இமயமலை பாபாஜியும் ஒருவரே. பரங்கிப்பேட்டையில் கி.பி., 203ம் ஆண்டு கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சுவேதாநாத அய்யர் - ஞானாம்பிகை தம்பதியினருக்கு மகனாக பாபாஜி பிறந்தார். பெற்றோர் அவருக்கு நாகராஜ் என்று பெயர் சூட்டினர்.
ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நாகராஜ், ஞானம் தேடி சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.
சாதுக்களுடன் சேர்ந்து யோகம், தியானம், பக்தி மார்க்கம் என பயில ஆரம்பித்தார்.
போகர் தரிசனம்
தமிழ்ச் சித்த மரபை தோற்றுவித்த ஆதிகுருவான அகத்தியரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நாகராஜிக்கு ஏற்பட்டது. இலங்கை கதிர்காமத்துக்கு சென்று தவம் செய்தால் அவரை தரிசனம் செய்யலாம் என்று வழிகாட்டினர் சாதுக்கள்.
இலங்கைக்கு ஆர்வமுடன் சென்று தவமிருந்த நாகராஜிக்கு, போகரின் தரிசனம் கிடைத்தது. போகரே, நாகராஜிக்கு யோகம் கற்றுக்கொடுத்து, கதிர்காமம் முருகரை தரிசனம் செய்ய உதவினார் என்கின்றனர் ஞானிகள். யோகத்தில் சிறந்து விளங்கியதால் 'பாபாஜி' என்று போற்றப்பட்டார்.
அகத்தியரின் அருள்
அகத்தியரை தரிசனம் செய்யும் ஆவலை போகரிடம் தெரிவித்தார் பாபாஜி. 'பொதிகை மலை சென்று தவம் செய்தால் அவரது தரிசனம் கிடைக்கும்' என்று வழிகாட்டினார் போகர். அதன்படி, பொதிகை மலையில் வைராக்கியமாக தவம் செய்த பாபாஜியின் பக்தியை கண்ட அகத்தியர் மனம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார். அத்துடன், 'கிரியா யோகா' என்னும் அற்புதமான கலையை பாபாஜிக்கு உபதேசித்தார். கிரியா யோகாவை கற்றுக் கொண்ட பாபாஜி இமயமலைக்கு சென்றார். கிரியா யோகா உலக மக்கள் நலனுக்காகப் பயன்பட வேண்டும் என தனது சீடர்களுக்கு கற்று தந்தார்.
கிரியா யோகா
கிரியா யோகா என்பது முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் பயிற்சியாகும். ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், மந்திரம் என மொத்தம் 144 வகையான பயிற்சிகளின் கலவையே கிரியா யோகா. இதை பயில்பவர்கள் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும் தன்மையைப் பெறுவார்கள் என்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கிரியா யோகாவை மீண்டெழ செய்த பாபாஜிக்கு, அவர் பிறந்த மண் ணிலே கோவில் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.