/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபசித்து முனிவருக்கு காட்சி விருதையில் கோலாகலம்
/
விபசித்து முனிவருக்கு காட்சி விருதையில் கோலாகலம்
ADDED : பிப் 21, 2024 01:35 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தில் விபசித்து முனிவருக்கு, பெரியநாயகர் சாமி காட்சி தரும் ஐதீக நிகழ்வு கோலாகலமாக நடந்தது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி துவங்கியது.
தினமும் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. தினம் காலை மற்றும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர்.
முக்கிய நிகழ்வாக, 6ம் நாள் உற்சவமான நேற்று, கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு பெரியநாயகர் சாமி காட்சி தரும் ஐதீக நிகழ்வு நடந்தது.
காலை 11:00 மணிக்கு மேல், சித்திரை மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளும், வசந்த மண்டபத்தில் விபசித்து முனிவரும் எழுந்தருளினர். மதியம் 12:30 மணிக்கு மேல், கயிலை வாத்தியங்கள் முழங்க ஆடி அசைந்தபடி பஞ்சமூர்த்திகள் உட்பிகார வலம் வந்து அருள்பாலித்தனர். தொடர்ந்து, 1:15 மணியளவில், கிழக்கு கோபுர வாசலை திறந்ததும், விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி கொடுத்தார்.
பக்தர்கள், சிவனடியார்கள் மலர் துாவி வரவேற்றனர். தொடர்ந்து, கடை வீதியில் நிலைநிறுத்தப்படும் பஞ்சமூர்த்திகளின் உற்சவர்கள் இன்று மதியம் 1:00 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
வரும் 23ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 24ம் தேதி மாசிமக தீர்த்தவாரி, 25ம் தேதி தெப்பல் உற்சவம், 26ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

