/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரி 2வது முறையாக நிரம்பியது
/
வீராணம் ஏரி 2வது முறையாக நிரம்பியது
ADDED : அக் 20, 2024 06:46 AM

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரி முழு கொள்ளளவை, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக எட்டியதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்டா பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அணைக்கரை கீழணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை நீர் மட்டம் 8.5 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து 1,250 கன அடியாக உள்ளது. கீழணையில் இருந்து வடவாற்றில் 305 கனஅடி, வடக்கு ராஜன்வாய்க்கால் 351 கன அடி, தெற்குராஜன் வாய்க்கால் 505 கன அடி, குமுக்கி மன்னியாறு உள்ளிட்ட சிறு வாய்க்கால்களில் 87 கனஅடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மழைநீர் சேர்ந்து வீராணம் ஏரிக்கு வடவாறு மூலம் 2,000 கனஅடி தண்ணீர் வீதம் வரத்து இருந்தது. இதனால் ஏரியில் நீர் மட்ம் கிடுகிடுவென உயர்ந்து. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 47.20 அடியாக இருந்தது. ஏரியில் இருந்து பாசனத்திற்கு 150 கன அடி, சென்னை குடி நீருக்கு 69 கன அடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.
வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் நேற்று மாலை முழு கொள்ளளவான 47.50 அடி (1392.10 மில்லியன் கனஅடி ) எட்டியது. இந்த ஆண்டில் வீராணம் ஏரி இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வடக்கிழக்கு பருவ மழை வானிலை மையம் அறிவிக்கப்பட்டுள்ளதால், வீராணம் ஏரி பாதுகாப்பு கருதி கீழணையில் இருந்து வடவாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரி நீர் மட்டத்தை குறைக்க பூதங்குடி வி.என்.எஸ் மதகு மூலம் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ஆய்வு
காட்டுமன்னார்கோவில் அருகே கூடுவெளிச்சாவடி அரசு விழாவில் பங்கேற்க வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், வீராணம் ஏரிக்கரை வழியாக சென்றார். அப்போது கந்தகுமாரன் ராதாமதகு அருகில் கரை விட்டு இறங்கி வீராணம் ஏரியை பார்வையிட்டார்.
அங்கிருந்து வீராணம் ஏரி நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரியிடம் போனில் கேட்டறிந்தார்.
அப்போது, வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.