/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை - ராமநத்தம் நான்கு வழி சாலைக்கு அளவீடு பணி துவக்கம்: திருச்சி - கடலுார் பயண நேரம், விபத்துகள் குறைய வாய்ப்பு

ADDED : அக் 07, 2024 06:53 AM

பெண்ணாடம்: ராமநத்தம் நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை அளவீடு செய்யும் பணி துவங்கியது. இதனால் கடலுார் - திருச்சி பயண நேரம் மற்றும் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது.
விருத்தாசலம் - ராமநத்தம் சாலை வழியாக திருச்சி, கோவை, மதுரை, கடலுார், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. 7 மீ., அகலம் உள்ள இச்சாலையில், குறுகிய பாலங்கள், வளைவான சாலைகளால், விருத்தாசலம் - ராமநத்தம் வரையிலான 42 கி.மீ., துாரத்தை கடக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலானது. திருச்சி - கடலுார், திட்டக்குடி - சென்னை, திட்டக்குடி - சிதம்பரம் பகுதிகளுக்கான பயண நேரம் அதிகமானதோடு, வாகன விபத்துக்களும் அதிகரித்து வந்தன.
இந்த சாலையில் சந்திக்கும் கடலுார் - விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையாக அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
குறுகிய சாலையாக இருந்த விருத்தாசலம் - ராமநத்தம் சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 49 கோடியில் 7 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது. ஆனாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.
விருத்தாசலம் - ராமநத்தம் சாலை சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தில் விரைவில் அகலப்படுத்தப்பட உள்ளதாக அப்போதைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை பணிகள் துவங்கவில்லை.
இந்நிலையில், விருத்தாசலம் - ராமநத்தம் சாலையை நான்கு வழி சாலையாக மாற்றியமைக்கும் பணிக்கு முதற்கட்டமாக நந்தப்பாடி - ஆவினங்குடி வரையிலான 16.6 கி.மீ., துாரத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் அகலம் அளவீடு செய்யும் பணி துவங்கியது.
வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.