/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் மணிமுக்தாறு படித்துறை பணிகள்... கிடப்பில்; ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கியும் நடவடிக்கை இல்லை
/
விருத்தாசலம் மணிமுக்தாறு படித்துறை பணிகள்... கிடப்பில்; ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கியும் நடவடிக்கை இல்லை
விருத்தாசலம் மணிமுக்தாறு படித்துறை பணிகள்... கிடப்பில்; ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கியும் நடவடிக்கை இல்லை
விருத்தாசலம் மணிமுக்தாறு படித்துறை பணிகள்... கிடப்பில்; ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கியும் நடவடிக்கை இல்லை
ADDED : பிப் 17, 2024 04:54 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் மணிமுக்தாறு படித்துறையை சீரமைக்க ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கியும் பணிகள் துவங்காததால், பொதுமக்கள், பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே மணிமுக்தாறு செல்கிறது. இந்த புண்ணிய நதியில் நீராடி, விருத்தகிரீஸ்வரர் சுவாமியை பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர். காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற ஆன்மிக ஐதீகம் கொண்டது விருத்தகிரீஸ்வரர் கோவில்.
மாசிமக பிரம்மோற்சவத்தின்போது, 1 லட்சத்துக்கும் அதிமானோர் மணிமுக்தாற்றில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, விருத்தகிரீஸ்வரரை வழிபடுவது வழக்கம்.
கனமழை காலத்தில் மட்டுமே ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நீர்வரத்து இருக்கும். ஓரிரு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து இல்லாமல் ஆறு வறண்டு கிடக்கும்.
ஆனால், நகரில் உள்ள குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும், ராட்சத வடிகால் வழியாக மணிமுக்தாற்றில் விடப்படுகிறது. இதன் காரணமாக படித்துறை பகுதி முழுதும் கழிவுநீர் தேங்கி மினி கூவமாக காட்சி அளிக்கிறது.
மாசிமக திருவிழாவின்போது மட்டும், நகராட்சி நிர்வாகம் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற அந்த பகுதியை தற்காலிகமாக சுத்தம் செய்வது தொடர்கதையாக உள்ளது.
மணிமுக்தாற்றின் கரையோரம், சித்தி விநாயகர் கோவில் அருகே உள்ள சோழர் காலத்து படித்துறை வழியாக இறங்கி, பக்தர்கள் நீராடுவது வழக்கம். 400 மீட்டர் துாரம் உள்ள இந்த படித்துறை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆனால், படித்துறை பகுதி முழுதும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளதால், பராமரிப்பின்றி, படித்துறை சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. தற்போது 50 மீட்டர் அளவு படித்துறையை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மீதம் உள்ள படித்துறை பகுதிகளில் கட்டடம் கட்டி சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலையில், படித்துறையை நிரந்தரமாக சீரமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் , நகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கடந்தாண்டு ஆலோசனை நடத்தினர். அதில், 6 கோடி ரூபாய் வரை செலவாகும் என, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால், தற்போது படித்துறை சீரமைக்க ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் கலெக்டர் அருண்தம்புராஜ் சேதமடைந்த படித்துறை பகுதிகளை பார்வையிட்டு, ஜனவரி மாதம் பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
ஆனால், இதுவரை பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், வரும் 25ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி தர்ப்பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த படித்துறையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.