/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு! விரைவில் முழு கொள்ளளவை எட்டும்
/
கடலுார் மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு! விரைவில் முழு கொள்ளளவை எட்டும்
கடலுார் மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு! விரைவில் முழு கொள்ளளவை எட்டும்
கடலுார் மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு! விரைவில் முழு கொள்ளளவை எட்டும்
ADDED : நவ 20, 2025 05:27 AM

கடலுார்: தொடர் மழையால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் கடலுார், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்தது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் கடந்த, 17 ம் தேதி முதல், 3 நாட்களாக தொடர் மழை பெய்தது.
இரவு பகலாக விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மாவட்டத்தின் உட்பகுதிகளிலும் குறிப்பாக, வறட்சியான பகுதியாக உள்ள திட்டக்குடி, தொழுதுார், வேப்பூர் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் ஆண்டுக்கு இயல்பாக பெய்ய வேண்டிய மழையான 1206 மி.மீ.,ட்டரில் நேற்று வரை கூடுதல் மழை பெய்துள்ளது. இதுவரை, 172 மி.மீ., மழை கூடுதலாகவே பெய்துள்ளது. இந்த தொடர்மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
அதேபோல சம்பா நெற்பயிர் நடவு செய்துள்ள கடலுார், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதிகளில், 25 ஆயிரம் ஏக்கர் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மாவட்டத்தில் ஓடும் தென் பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தா நதி ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதி களில் தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரு கின்றன.
கடலுார் மாவட்டத்தில், விருத்தாசலம் பகுதியில் 210 ஏரிகளும், சிதம்பரம் பகுதியில் 18 ஏரிகளும் உள்ளன. இது தவிர 370 ஏரிகள் கிராம ஊராட்சிப்பகுதியில் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இதுவரை 24 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. மீதியுள்ள 204 ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரும்பாலான ஏரிகள் 50 சதவீதம் மேல் நிரம்பியுள்ளன.
இம்மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரியில், அதன் மொத்த கொள்ளளவான 47.50 அடியில், தற்போது 45.30 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
பெருமாள் ஏரி, 99 சதவீதத்தை எட்டியுள்ளது. வாலாஜா ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரிக்கு 60 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கொத்தவாச்சேரி 100 சதவீதம்; சொக்கன்கொல்லை 100 சதவீதம்; சாத்தபாடி 50 சதவீதம்; அரங்கமங்கலம் 90 சதவீதம்; ஆனத்துார் 90 சதவீதம்; அகர ஆலம்பாடி 60 சதவீதம் நிரம்பியுள்ளன.
மேல கொலக்குடி 80 சதவீதம்; குமுடிமுளை ஏரி 95 சதவீதம்; அம்பாபுரம் ஏரி 90 சதவீதம்; உளுத்துார் ஏரி 90 சதவீதம்; சிப்பான் ஏரி 90 சதவீதம்; நத்தமேடு ஏரி 90 சதவீதம் நிரம்பியுள்ளன. அணையின் கொள்ளளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

