பணப்பாக்கம் புறவழிச் சாலை: பயன்பாட்டிற்கு வருவது எப்போது
பணப்பாக்கம் புறவழிச் சாலை: பயன்பாட்டிற்கு வருவது எப்போது
UPDATED : நவ 06, 2026 07:15 PM
ADDED : நவ 05, 2026 07:37 PM

பண்ருட்டி: கடலுார்- மடப்பட்டு புறவழிச்சாலையில் பணப்பாக்கம் ரயில்வே கிராசிங் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடலுார் - மடப்பட்டு இடையிலான 46 கி.மீ., துார சாலையை கடந்த 2020-2021ம் ஆண்டில் சென்னை-கன்னியாகுமரி திட்டத்தில், ரூ.321 கோடி செலவில், மேம்படுத்தப்பட்ட இருவழிச்சாலை, திருவதிகை ரயில்வே கேட் அருகே உள்ள பக்கிரிப்பாளையம்-பணப்பாக்கம் (வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலை)- புதுப்பேட்டை வழியாக அங்குசெட்டிப்பாளையத்திற்கு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 2021 துவங்கிய பணி 2024 ம் ஆண்டு கடலுார்- மடப்பட்டு வரையிலான இருவழிச்சாலை மற்றும் பணப்பாக்கம் புறவழிச்சாலை பணியும் முடிவடைந்தன. ஆனால் ரயில்வே மேம்பால கிராசிங் பகுதியில் பணிகள் செய்திட தெற்கு ரயில்வே அனுமதி வழங்காததால் புறவழிச்சாலையில் இணைப்பு இல்லாமல் கிடப்பில் இருந்தது.
இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன் தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியதை தொடர்ந்து, 3 மாதங்களுக்கு முன் ரயில்வே கிராசிங்கில் கான்கிரீட் துாண்கள் அமைத்து, ஒரு மாதத்திற்கு முன் தளம் அமைக்கப்பட்டது.
ரயில்வே கிராசிங்கின் இருபுறமும் பாதுகாப்பு கான்கீரீட் கட்டை பணி அமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக கைப்பிடி சுவர் 4 அடி அளவில் மட்டுமே அமைத்துள்ளனர். ரயில்வே பாலத்தில் 9 அடி உயரத்தில் போடுவதற்கான பணிகள் முடிவு பெறவில்லை. ரயில்வே கிராசிங்கில் கான்கரீட் இடையே தண்டவாளங்கள் வைத்து இணைக்கும் பணிகள் நடைபெறவில்லை.
இப்பணிகள் முடிந்தால் திருக்கோவிலுார், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலுார் செல்லும் வாகனங்கள் பணப்பாக்கம் ரயில்வே கிராசிங் வழியாக ராசாப்பாளையம், மாளிகைமேடு வழியாக கடலுார் செல்லலாம்.
கடலுார், கோலியனுார், புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் பண்ருட்டி நகருக்கு வராமல் உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், மடப்பட்டு, கெடிலம், அரசூர் செல்ல இந்த புறவழிச்சாலை முக்கியமானதாக இருக்கும்.
இதனால் பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதற்கு இப்பணியை விரைவுபடுத்தி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புறவழிச்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும். இதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
