தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் கடலுார் மாவட்டத்தில் நிறைவேற்றப்படுமா?
தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் கடலுார் மாவட்டத்தில் நிறைவேற்றப்படுமா?
ADDED : மார் 07, 2026 04:42 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும், தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் திட்டத்தின் கீழ் விளையாட்டு அரங்குகள் அமைக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனை த்து சட்டசபை தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என, விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தார்.
அதன்படி 234 சட்டசபை தொகுதிகளில், 61 தொகுதிகளில் ஸ்டேடியங்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் மீதமுள்ள, 173 தொகுதிகளில் மினிஸ்டேடியம் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதி, துணைமுதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதி உள்ளிட்ட, 9 தொகுதிகளிலும் இரண்டாம் கட்டமாக குறிஞ்சிப்பாடி, கும்பகோணம், பென்னாகரம், உசிலம்பட்டி, மேலுார், ஒட்டன்சத்திரம், ராமநாதபுரம், மொடக்குறிச்சி, பண்ருட்டி உள்ளிட்ட, 19 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடந்தது.
கடந்த மார்ச்சில், சேப்பாக்கம், காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கட்டி முடிக்கப்பட்ட மினி ஸ்டேடியங்களை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து பேசுகையில், முதல்கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட தொகுதியில் மினிஸ்டேடியங்கள் கட்டும் பணி நடக்கிறது. இரண்டாம் கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட இடங்களில் கட்டுவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மூன்றாம் கட்ட பட்டியலில் 25தொகுதிகளில் இடம்பெறும் என்றும், 2026 ஜனவரிக்குள் அவை கட்டிமுடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மூன்றாம் கட்டமாக கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளில் ரூ.120 கோடி மதிப்பில் மினிஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
கடலுார் மாவட்டத்தில், இரண்டாம் கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி தொகுதியில் வழுதலம்பட்டு கிராமத்தில் மினி ஸ்டேடியம் கட்டுமானப்பணிகள் துவங்கி 40சதவீத அளவிற்கு நடந்துள்ளது. பண்ருட்டி தொகுதியில் முதலில் தேர்வு செய்யப்பட்ட தகுதியானதாக இல்லாததால் மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
மூன்றாம் கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஸ்ரீஆதிவராகநல்லுார் கிராமத்தில் மினி ஸ்டேடியம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.
இப்பணிகளை விரைந்து முடித்து விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள, 9 தொகுதிகளில் கடலுாரில் அண்ணா விளையாட்டரங்கு, விருத்தாசலத்தில் மினி ஸ்டேடியம் உள்ளன.
நெய்வேலியில் என்.எல்.சி.,விளையாட்டு மைதானங்கள், சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மைதானங்கள் இருப்பினும் விளையாட்டில் ஆர்வமுள்ள அனைவரும் சென்று பயிற்சி பெற இயலுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று தொகுதிகளில் மினிஸ்டேடியம் தொடர்பான பணிகள் நடக்கிறது. மீதமுள்ள புவனகிரி மற்றும் திட்டக்குடி தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
