/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளிங்கர்ஸ் விளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள்... சீரமைக்கப்படுமா? ; விபத்து, திருட்டுகளை தடுக்க நடவடிக்கை தேவை
/
பிளிங்கர்ஸ் விளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள்... சீரமைக்கப்படுமா? ; விபத்து, திருட்டுகளை தடுக்க நடவடிக்கை தேவை
பிளிங்கர்ஸ் விளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள்... சீரமைக்கப்படுமா? ; விபத்து, திருட்டுகளை தடுக்க நடவடிக்கை தேவை
பிளிங்கர்ஸ் விளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள்... சீரமைக்கப்படுமா? ; விபத்து, திருட்டுகளை தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : மார் 18, 2025 05:36 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் நகரில் விபத்துகள், குற்றச் செயல்களை தவிர்க்கும் வகையில் பிளிங்கர்ஸ் விளக்குகள்,பழுதான சி.சி.டி.வி.,க்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
விருத்தாசலம் நகராட்சி 33 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். நகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ., தாசில்தார், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், டி.எஸ்.பி., முகாம் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக் கல்லுாரி, புகழ்பெற்ற கோவில்கள், தியேட்டர்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், நுண்கடன் வங்கிகள், பெருவணிக நிறுவனங்கள் உள்ளன.
அதுபோல், திருச்சி - சென்னை ரயில்வே மார்க்கத்தில் பிரதான ரயில் நிலையம் உள்ளது. தமிழகத்திலேயே பீங்கான் தொழிற்பேட்டை இங்கு மட்டுமே செயல்படுகிறது. மேலும், திருச்சி - கடலுார், சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், முக்கிய சந்திப்பாக உள்ளதால், அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. இதனால் பிரதான பகுதிகளான ஜங்ஷன்ரோடு, கடலுார் ரோடு, பெண்ணாடம் ரோடு, வேப்பூர் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு தொடர்கிறது.
இதனால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நகரின் பிரதான சாலைகளில், 24 மணி நேரமும் ஒளிரும் வகையில் பிளிங்கர்ஸ் விளக்குகள் பொறுத்தப்பட்டன. தானியங்கி பிளிங்கர்ஸ் இயங்கும்போது, வாகனங்களின் வேகம் குறைவதுடன், பாதசாரிகள் சிரமமின்றி சென்று வந்தனர். ஓரிரு மாதங்களே பயன்பாட்டில் இருந்த அவை, தற்போது காட்சிப் பொருளாக மாறியது. மேலும் மழை வெயில் காலங்களில் துருபிடித்து பாதசாரிகள், பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் மீது முறிந்து விழுந்தன.
தற்போது, கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு (சி.வி.எஸ்.சாலை) வரை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு விட்டதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பெரியார் நகர், தாசில்தார் அலுவலகம், பூதாமூர் பிரிவு சாலை, ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், பாலக்கரை, நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, விருத்தாசலம் நகரில் காட்சிப் பொருளான பிளிங்கர்ஸ் விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சி.சி.டி.வி., கேமராக்களை திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முக்கிய சாலைகள், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பொறுத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை கேபிள் அறுந்தும், கேமரா பழுதாகியும் காட்சிப் பொருளாக மாறியுள்ளன. சமீபத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தப்பிய குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, சி.சி.டி.வி., கேமராக்களை பழுதுநீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பாலக்கரையில் சிக்னல்
விருத்தாசலம் பாலக்கரையில் முன்னோட்டமாக சிக்னல் கம்பங்களை முன்னாள் எஸ்.பி., ராஜாராம் திறந்து வைத்தார். ஆனால் இதுநாள் வரை சிக்னல்கள் பயன்பாடின்றி, பிளிங்கர்ஸ் விளக்குகள் மட்டுமே ஒளிருவதால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர். எனவே, சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, வாகன ஓட்டிகளை கண்காணித்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.