/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி... ஒதுக்கப்படுமா? மானிய கோரிக்கையில் முதல்வர் அறிவிப்பாரா?
/
வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி... ஒதுக்கப்படுமா? மானிய கோரிக்கையில் முதல்வர் அறிவிப்பாரா?
வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி... ஒதுக்கப்படுமா? மானிய கோரிக்கையில் முதல்வர் அறிவிப்பாரா?
வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி... ஒதுக்கப்படுமா? மானிய கோரிக்கையில் முதல்வர் அறிவிப்பாரா?
ADDED : மார் 17, 2025 06:20 AM

பரங்கிப்பேட்டை: வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கையின்போது முதல்வர் அறிவிப்பாரா என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சேலம் அருகே உள்ள சேர்வராயன் மலையில் வெள்ளாறு உருவாகி விருத்தாசலம் அருகே உள்ள கூடலையாத்துார் எனும் இடத்தில் வெள்ளாறுடன் மணிமுக்தாறுடன் இணைந்து சேத்தியாத்தோப்பு வழியாக பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. புவனகிரி மற்றும் வெள்ளாற்று கரையோரம் பொதுமக்கள் நல்ல குடிநீரை குடித்து வந்தனர். விவசாயிகள் விவசாயமும் செய்து வந்தனர்.
காலப்போக்கில், பரங்கிப்பேட்டை கடலில் இருந்து உப்பு நீர் வெள்ளாற்றுக்குள் புகுந்ததால், தற்போது பல கிராமங்களில் குடிநீர், உவர்ப்பு நீராக மாறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சில கிராமங்களில் பாதிப்பு இருந்த நிலையில், தற்போது பரங்கிப்பேட்டையில் துவங்கி, ஆதிவராகநல்லுார், தம்பிக்குநல்லான்பட்டிணம், கீழ் புவனகிரி, புவனகிரி, பெருமாத்துார், வண்டுராயன்பட்டு, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.
மேலும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளாற்று நீரில் கடல் நீர் உட்புகுந்ததால் கடந்த 20 ஆண்டுகளாக 30 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குடிப்பதற்கு மினரல் வாட்டரும், முப்போகம் செய்து வந்த விவசாயிகள் ஒருபோகம் மட்டுமே விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பல பொதுநல அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர்களை சந்தித்து கோரிக்கை வைத்தும் வந்தனர்.
தேர்தல் நடக்கும் போதெல்லாம் பிரசாரத்திற்கு புவனகிரிக்கு வரும் அரசியல் கட்சி தலைவர்கள் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு செல்வதோடு சரி. ஆனால், தற்போது வரை தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே உள்ளது. வெள்ளாற்றின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி, தடுப்பணை கட்ட தற்போதைய திட்ட மதிப்பீடு 150 கோடி ரூபாய் செலவாகும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையின்போது, முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் கூறுகையில், கடலுார் மாவட்டத்திற்கு கடந்த மாதம் கள ஆய்விற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த போது, வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வரும் என புவனகிரி, சிதம்பரம் தொகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இத்திட்டம் அறிவிக்கப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், இப்பகுதி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயிகள் இரு போகம் விவசாயம் செய்ய முடியும்.
தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கையில், இத்திட்டம் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அறிவிப்பு இல்லாத பட்சத்தில் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடுக்க உள்ளேன்' என்றார்.