/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லில் ஈரப்பதம் உயர்த்தி கொள்முதல் செய்யப்படுமா? கடலுார் மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு
/
நெல்லில் ஈரப்பதம் உயர்த்தி கொள்முதல் செய்யப்படுமா? கடலுார் மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு
நெல்லில் ஈரப்பதம் உயர்த்தி கொள்முதல் செய்யப்படுமா? கடலுார் மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு
நெல்லில் ஈரப்பதம் உயர்த்தி கொள்முதல் செய்யப்படுமா? கடலுார் மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு
ADDED : ஜன 25, 2025 05:03 AM

கடலுார் : நெல்லில் ஈரப்பதம் உயர்த்தி கொள்முதல் செய்வது தொடர்பாக மத்தியக் குழுவினர் நேற்று கடலுார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஆய்வு செய்தனர்.
நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் 17 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெஞ்சல் புயல், கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக டெல்டா, கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது.
அதனையேற்று மத்தியக்குழுவினர் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் உதவி இயக்குனர்கள் நவீன், ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே, தரக்கட்டுப்பாடு மேலாளர் பாஸ்கர்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடலுார் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில் முட்டம், ராஜேந்திரசோழகன் மற்றும் குப்பங்குழி பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை, கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வில், 81 மாதிரிகளை மத்திய நிபுணர் குழுவினர் சேகரித்து ஆய்வ செய்தனர். பனிப்பொழிவு மற்றும் சூரிய ஒளி குறைவு காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இம்மாதிரிகளில் கூடுதல் திரிபுகள், ஈரப்பதம் மற்றும் தேவையற்ற கழிவுகளின் அளவு குறித்து நாளை சென்னை ஆய்வகத்தில் ஆய்வு செய்து, அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். அதனடிப்படையில் நெல் கொள்முதல் ஈரப்பதம் நிர்ணயம் செய்யப்படும் என, தெரிகிறது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், பெஞ்சல் புயல் மற்றும் மழை காரணமாக இந்தாண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்த கேட்டுகொண்டதன்பேரில், மத்திய ஆய்வுக்குழு உறுப்பினர்கள் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர் என்றார்.

