/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடரும் விதிமீறல் விளம்பர பலகைகள்; மாவட்ட நிர்வாகம் விரைந்து அகற்றுமா?
/
தொடரும் விதிமீறல் விளம்பர பலகைகள்; மாவட்ட நிர்வாகம் விரைந்து அகற்றுமா?
தொடரும் விதிமீறல் விளம்பர பலகைகள்; மாவட்ட நிர்வாகம் விரைந்து அகற்றுமா?
தொடரும் விதிமீறல் விளம்பர பலகைகள்; மாவட்ட நிர்வாகம் விரைந்து அகற்றுமா?
ADDED : நவ 23, 2024 06:44 AM

கடலுார் : கடலுார் நகரில் சிக்னல் கம்பங்களில் அபாயகரமான முறையில் தொங்கும் விளம்பரப் பலகைகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுதும், அனுமதியில்லாமல் பேனர் மற்றும் விளம்பர பலகைகள் வைப்பதால் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படுவதும், அதிகாரிகள் உடனடியாக பேனர் மற்றும் விளம்பர பலகைகளை தற்காலிக அகற்றுவதும் வாடிக்கையாக உள்ளது.
கடலுாரில் கடந்த 19ம் தேதி லாரன்ஸ் ரோட்டில் தொங்கிக்கொண்டிருந்த விளம்பர பலகை காற்றில் அறுந்துவிழுந்ததில், அவ்வழியே பயணம் செய்த தனியார் கல்லுாரி விரிவுரையாளர் காயமடைந்தார்.
அதன் எதிரொலியாக மறுநாள் இரவு லாரன்ஸ் ரோடு, பாரதி ரோடு பகுதியில் அனுமதியின்றி, விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
இதேபோல் மாவட்டம் முழுவதிலும் 357 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.
ஆனாலும், கடலுார் மாநகரின் வேறு சில இடங்களில் விதிமீறல் விளம்பர பலகைகள் அகற்றப்படாமலேயே உள்ளன. குறிப்பாக கடலுார் அரசு தலைமை மருத்துவமனை எதிரே, போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் சென்டர் மீடியனில் உள்ள சிக்னல் கம்பங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் உள்ளன.
இதுபோல பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ள அபாயகரமான விளம்பர பலகைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.