/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தின் மீது அரசு கவனம்... செலுத்துமா?: வெறும் தேர்வு மட்டும் நடத்துவதால் கவலை
/
பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தின் மீது அரசு கவனம்... செலுத்துமா?: வெறும் தேர்வு மட்டும் நடத்துவதால் கவலை
பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தின் மீது அரசு கவனம்... செலுத்துமா?: வெறும் தேர்வு மட்டும் நடத்துவதால் கவலை
பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தின் மீது அரசு கவனம்... செலுத்துமா?: வெறும் தேர்வு மட்டும் நடத்துவதால் கவலை
ADDED : டிச 18, 2025 06:13 AM

கடலுார்: பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தில், வகுப்புகள் எடுக்காமல் தேர்வுகள் மட்டும், நடத்தப்படுவதால் பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதெற்கென ஒரு துறையை ஒதுக்கி துணை முதல்வர் கவனித்து வருகிறார். மாவட்டந்தோறும் சென்று விளையாட்டில் சிறந்த மாணவ மாணவியர்களுக்கு அவர் ஊக்கப்படுத்தி வருகிறார்.
அத்துடன் மத்திய, மாநில, தனியார் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதையொட்டி மாணவ மாணவியர்களும் விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது.
தமிழக பள்ளிகளில், 6 ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உடற்கல்வி ஒரு பாடமாக உள்ளது. செய்முறை தேர்வுக்கு 70 மதிப்பெண்கள், எழுத்து தேர்வுக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் உடற்கல்வி கற்றுத்தருகின்றனர்.
இந்நிலையில், உடற்கல்வி தொடர்பான வகுப்புகள் முறையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடுநிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளில் உடற்கல்விக்கென ஆசிரியரே இல்லாத நிலை உள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களோ, மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்களோ உடற்கல்வி பாடத்திற்காக நியமிக்கப் படுகின்றனர்.
இதனால் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வில் மட்டும் உடற்கல்வி எழுத்து தேர்வு சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
புத்தகமும் கொடுக்காமல், வகுப்புகளையும் நடத்தாமல் தேர்வு மட்டும் நடத்துவதா என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.
பல பள்ளிகளில் உடற்கல்வி தேர்வையே நடத்தாமல் விட்டு விடுவதுமுண்டு. மாணவ மாணவியர்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவக்கூடிய உடற்கல்வி பாடத்திட்டத்தை உருவாக்கி, புத்தக்கங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கி, உடற்கல்வி பாடங்களை நடத்த போதிய ஆசிரியர்களை நியமித்த பின் தேர்வுகளை நடத்த வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில் கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்விக்கென பாடத்திட்டம் கூட இல்லாத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு உடற்கல்விக்கு பாடத்திட்டம் உருவாக்கி, அதன் அடிப்படையில் இ-புத்தகங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இது உடற்கல்வி ஆசிரியர்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனாலும், மற்ற பாடங்களை போல உடற்கல்விக்கான புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கி, பாடங்களை நடத்த போதிய ஆசிரியர்களை நியமனம் செய்தால் தான், உடற்கல்வி தேர்வில் மாணவர்கள் முழுமையான தயாரிப்புடன் எதிர்கொள்ள முடியும்.
இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
பல பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக விளையாட்டுப்போட்டிகளுக்கு அனுப்ப கூட மறுக்கின்றனர். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவே, உடற்கல்வி உள்ளது.
இதில் முதலுதவி, உடற்பயிற்சி, மனக்கட்டுப்பாடு கடைபிடிக்க யோகா போன்ற பல விஷயங்கள் உள்ளன. இதன் மூலம் தேர்வுகளிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட முடியும். உடற்கல்வியை கட்டாய பாடமாக்கி புத்தகங்கள், வகுப்புகளை முறையாக நடத்தி அதன்பின் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

