/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலையம் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா: பெண்ணாடம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
/
சுகாதார நிலையம் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா: பெண்ணாடம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
சுகாதார நிலையம் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா: பெண்ணாடம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
சுகாதார நிலையம் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா: பெண்ணாடம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 24, 2024 07:03 AM

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் வருவாய் குறுவட்ட தலைமையிடம் மற்றும் தேர்வுநிலை பேரூராட்சியாக உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. 5 டாக்டர்கள், 5 செவிலியர்கள், 5 உதவியாளர்கள் உள்ளனர். சுகாதார நிலையத்தில் தினசரி சுமார் நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 7 படுக்கைகள் கொண்ட கர்ப்பிணிகள் வார்டுகள் உள்ளன.
சுகாதார நிலைய வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் உள்ளே கசிந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்படுவது இதுவரை தொடர்கிறது.
சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான 24 மணி நேர பிரசவம், லேப் வசதி, குடும்ப கட்டுப்பாடு, அனைத்து வகை தடுப்பூசிகள், பள்ளி சிறார் திட்டம், கோவிட் உள்ளிட்டவைகளுக்கு ஊசி, மருந்து மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஓமியோபதி சிகிச்சைக்கு தனியாக கட்டடம் உள்ளது. பாம்பு, தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அவசர சிகிச்சை, பல் மருத்துவம், பிசியோதெரபி மருத்துவம் பார்க்கப்படுகிறது. எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி உள்ளன. போதிய கட்டட வசதிகள். பிரேத பரிசோதனை வசதி இல்லை. சுகாதாரமான கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.
மேலும், விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரியலுார் மாவட்டம், தளவாய், ஆலத்தியூர் சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடுபவர்களை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மேல்சிகிச்சைக்காக திட்டக்குடி, விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்புகின்றனர். அவ்வாறு செல்லும்போது உயிருக்கு போராடுபவர்கள் நடுவழியில் இறப்பது தொடர்கிறது.
எனவே, பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.