/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா? பெண்ணாடம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
/
புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா? பெண்ணாடம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா? பெண்ணாடம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா? பெண்ணாடம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 03, 2024 07:20 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் மெய்கண்டார் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், அரசு நிதி பாழாவதும் தடுக்கப்படும்.
மாவட்டத்தில் பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியாகவும், வருவாய் குறுவட்டமாகவும் உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், சினிமா தியேட்டர், ஜவுளி, நகை கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், பெண்ணாடத்தையொட்டி அரியலுார் மாவட்ட எல்லையில் இரண்டு சிமென்ட் ஆலைகள் உள்ளன.
திட்டக்குடி தொகுதியில் ரயில் நிலையமும் இங்குதான் உள்ளது. சுற்றி யுள்ள திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், தாழநல்லுார், இறையூர், முருகன்குடி, துறையூர் மற்றும் அரியலுார் மாவட்டம், சிலுப்பனுார், சேந்தமங்கலம், ஈச்சங்காடு, மதுரா நகர், செங்கமேடு உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு பெண்ணாடம் வந்து செல்ல வேண்டி உள்ளது.
கிராம மக்கள் அதிகளவில் வந்து செல்வதால் பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும்.
இங்குள்ள பழைய பஸ் நிலையத்தில், குடிநீர், கழிவறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பஸ் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும், வாகன போக்குவரத்து அதிகரிப்பால் பெண்ணாடம் கடைவீதி, பஸ் நிலையம் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்களும் நிகழ்ந்தன.
கடந்த 2005ல், பெண்ணாடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க, அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 25 லட்சம் ரூபாய், கலெக்டரின் சிறுசேமிப்பு ஊக்க நிதி 9 லட்சம், பேரூராட்சி பொது நிதி 10 லட்சம் ரூபாய் என 44 லட்சம் ரூபாய் மதிப்பில் 19 கடைகள், மேல்நிலை குடிநீர் தொட்டி, ஹைமாஸ் விளக்கு உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.
இதற்கு 'மெய்கண்டார்' பஸ் நிலையம் என பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 29ம்தேதி அப்போதைய கலெக்டர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த (தற் போது வேளாண்துறை அமைச்சர்) பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
பின்னர், பேரூராட்சி நிதி 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை, குளியலறை, ரூ.1.50 லட்சத்தில் ஆடு அறுக்கும் இடம் ஆகியன புதிய பஸ் நிலைய வளாகத்திற்குள் கூடுதலாக கட்டப்பட்டன.
பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மெய்கண்டார் பஸ் நிலையத்திற்குள் ஓரிரு மாதங்கள் மட்டுமே பஸ்கள் உள்ளே சென்று வந்த நிலையில், நாளடைவில் பஸ்கள் திட்டகுடி - விருத்தாசலம் சாலையிலேயே நின்று சென்றது.
பின்னர் பயணிகள் வருகையின்றி பஸ்கள் உள்ளே வருவதும் முற்றிலும் நின்றது. காட்சிப்பொருளாக உள்ள பஸ் நிலையத்தை பயன்பாட் டிற்கு கொண்டுவர இதுவரை எந்த அதிகாரிகளும், அமைச்சரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், பஸ் நிலையம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதுடன், கட்டடங்களும் நாளுக்கு நாள் பராமரிப்பின்றி பாழாவதுடன், 55 லட்சம் ரூபாய் அரசு நிதி வீணாவது தொடர்கிறது.
எனவே, பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் தினசரி சென்று வர, மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொது மக்கள், பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

