/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்களை சுத்தம் செய்யும் வசதி துவங்குமா? விருதையில் பயணிகள் எதிர்பார்ப்பு
/
ரயில்களை சுத்தம் செய்யும் வசதி துவங்குமா? விருதையில் பயணிகள் எதிர்பார்ப்பு
ரயில்களை சுத்தம் செய்யும் வசதி துவங்குமா? விருதையில் பயணிகள் எதிர்பார்ப்பு
ரயில்களை சுத்தம் செய்யும் வசதி துவங்குமா? விருதையில் பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 08, 2025 12:42 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில்ரயில்களை சுத்தம் செய்யும் வசதியைஏற்படுத்தினால், பெருநகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சென்னை - திருச்சி மார்க்கத்தில், வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சஃபார் போன்ற சிறப்பு ரயில்களும்; சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் கூட்ட நெரிசலுடன் இயங்குகின்றன. தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் பிரதானமாகும்.
இங்கிருந்து திருச்சி - சென்னை, சேலம் - கடலுார் மார்க்கத்தில் பயணிகள், பார்சல் சேவை மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கல்வி, மருத்துவம், வணிகம் என கடலுார் மட்டுமல்லாது பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் பயனடைகின்றனர்.
பிரிட்டிஷ் காலத்தில் துவங்கிய பழமையான ரயில்வே ஸ்டேஷனாக இருந்தாலும், ரயில்களை சுத்தம் செய்து புறப்படச் செய்யும் வசதி துவங்கவில்லை. சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனை அடுத்து, திருச்சியில் மட்டுமே சுத்தம் செய்யும் வசதிகள் உள்ளன. இது போன்ற வசதி இல்லாததால் விருத்தாசலத்தில் இருந்து நேரடியாக ரயில்களை இயக்கும் வசதியை ஏற்படுத்த முடியவில்லை.
பொதுவாக, ரயில்வே ஸ்டேஷன் யார்டில் (பணிமனை) நிறுத்தப்படும் ரயில்களை சுத்தம் செய்து சர்வீஸ் செய்யப்படும். ஆனால், பணிமனை இல்லாத விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் பக்கவாட்டு பகுதிகளில் நிறுத்தி, தற்காலிகமான (நடமாடும்) இயந்திரங்கள் மூலம் ரயில்களை சுத்தம் செய்து, புறப்பட ஏற்பாடு செய்யலாம்.
இங்கு, தண்ணீர், மின்சாரம் என எந்தவித பிரச்னையும் இல்லை. ஒரு ரயிலை சுத்தம் செய்திட குறைந்தது ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் நடமாடும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் ரயில்களை சுத்தம் செய்து புறப்பட செய்வதால், கூடுதல் ரயில்கள் நேரடியாக புறப்பட முடியும்.
இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து, கடலுார் உட்பட நான்கு மாவட்ட மக்களின் பயண வசதியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாம்பரம் பாசஞ்சர்நீட்டிக்க வாய்ப்பு விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயில், வழக்கமாக விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் காலை 5:20க்கு புறப்பட்டு, 8:30 மணிக்கு சென்றடைகிறது. மாலை 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:30 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. இந்த ரயிலை விருத்தாசலத்தில் இருந்து நீட்டித்தால், அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட செய்யலாம்.
அது போன்று, இரவு 10:20 மணிக்கு விருத்தாசலம் வந்து சேரும். இங்கேயே ரயிலை சுத்தம்செய்து, மீண்டும் அதிகாலை வழக்கம்போல புறப்பட செய்ய முடியும். இதன் மூலம் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி மற்றும் பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள், சென்னைக்கு அமர்ந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இடநெருக்கடியான தலைநகரில் தங்குவதை தவிர்த்து, தினசரி வீட்டிற்கு வந்து செல்ல முடியும். இதுபோல், சேலம், ஈரோடு, கோவை போன்ற பெரு நகரங்களுக்கும் ரயில்களை இயக்கினால், ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
சரக்கு சேவை அதிகரிப்பு விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆந்திரா, மும்பை, டில்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து உரம், சிமென்ட் மூட்டைகள் சரக்கு ரயில்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதே போன்று, இங்கிருந்து நெல் மூட்டைகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது, காணாதுகண்டான் எஸ்.என்.ஜெ., டிஸ்டில்லரி பிரைவேட் ஆலைக்கு மொலாசஸ் சேவையும் துவங்கியுள்ளது. இதனால் சரக்குகள் இறக்கும் தளமும் படுபிசியாக மாறியுள்ளது.
எனவே, சரக்கு இறக்கு தளத்தில் கூடுதல் மின் விளக்குகள் பொருத்தி இரவிலும் ஏற்றுமதி, இறக்குமதி பணியை தீவிரப்படுத்த வேண்டும். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் சுமைதுாக்கும் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து ரயில்வே ஊழியர் கூறுகையில், 'விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகள் தினசரி காலை, மாலை வேளைகளில் நடமாடும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. அது போன்று, ராட்சத இயந்திரங்கள் மூலம் ரயிலையும் சுத்தம் செய்யலாம்.
பெருநகரங்களுக்கு நேரடி ரயில் சேவை துவங்கினால் பயணிகளுக்கு எளிதில் போக்குவரத்து வசதி கிடைப்பதுடன், ரயில்வே நிர்வாகத்துக்கு இரட்டிப்பு வருவாய் கிடைக்கும்' என்றார்.