/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர்,உணவுக்காக வெளியேறும் வன விலங்குகள் பாதுகாக்கப்படுமா?
/
குடிநீர்,உணவுக்காக வெளியேறும் வன விலங்குகள் பாதுகாக்கப்படுமா?
குடிநீர்,உணவுக்காக வெளியேறும் வன விலங்குகள் பாதுகாக்கப்படுமா?
குடிநீர்,உணவுக்காக வெளியேறும் வன விலங்குகள் பாதுகாக்கப்படுமா?
ADDED : மே 08, 2025 01:32 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே குடிநீர் மற்றும் உணவு தேடி நெஞ்சாலைக்கு வரும் வன விலங்குகள் பலியாவதை தடுக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபாக்கம் அடுத்த அரசங்குடி கிராமத்தை யொட்டி அரசுக்கு சொந்தமான வனப்பகுதி அமைந்துள்ளது. திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அடுத்த பாதுாரில் தொடங்கி வேப்பூர் வழியாக சேலம்- - விருத்தாசலம் சாலையில் வேப்பூர், பெரியநெசலூர், அடரி, கீழ்ஒரத்தூர், மாங்குளம், சிறுபாக்கம், அரசங்குடி, கள்ளக்குறிச்சி மாவட்டமான கீழ்குப்பம், நயினார்பாளையம் வரை சாலையின் இரு புறமும் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் பரந்து விரிந்துள்ளது.
வனப்பகுதியில் ஆச்சான், புங்கன், நாவல், கூர்மருது ஆகிய மரங்களும், தாவரங்களும் வளர்ந்துள்ளன. இங்கு மான், மயில், எறும்புதின்னி, காட்டு பன்றிகள், நரிகள் உட்பட பல்வேறு உயிரினங்கள், பறவை இனங்கள் வசிக்கின்றன.
இவைகள், குடிநீர் தேவைக்காக வனப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டன. மழை காலங்களில் வீணாகும் மழை நீரினை சேமிக்கவும், தடுப்பணையில் நீர் சேமிக்கப்பட்டால் அருகில் உள்ள விவசாய திறந்தவெளி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்திடவும் தடுப்பணைகள் அமைக்கப்பட்டன.
மேலும், விலங்குகளுக்கு தண்ணீர் அருந்தும் வகையில் அ.தி.மு.க., ஆட்சியில் ஜே.ஜே., வடிவிலான கான்கிரீட் தொட்டிகள் அமைக்கப்பட்டன. வறட்சி காலங்களில் கான்கிரீட் தொட்டிகளில் நீரை நிரப்பி வனவிலங்குகளின் குடிநீர் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டன.
அதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில், தொட்டிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்காததால், வனவிலங்குகள் குடிநீர் மற்றும் உணவுக்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து வருகின்றன. அப்படி கடக்கும் மான், மயில் உயிரினங்கள் வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன.
மேலும், விவசாய நிலங்களில் உணவு மற்றும் குடிநீருக்காக வரும் விலங்குகள் திறந்தவெளி கிணறுகளில் உள்ளே விழுந்து பலியாகின்றன.
எனவே, சாலையில் இருபுறமும் வனத்துறை அதிகாரிகள் தடுப்பு வேலி அமைத்திடவும், கோடை காலங்களில் வன விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வாகனம் மூலம் கான்கிரீட் தொட்டிகளில் நீரை நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் விலங்குகள் வந்தால் மரவள்ளி, மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், அழித்தும் நாசம் செய்கின்றன.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு விவசாயத்தை புறக்கணித்துவிட்டு மாற்று தொழிலுக்கும், கேரளா பெங்களூருக்கும் பிழைப்பை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வனவிலங்குகளின் குடிநீர தேவையை நிறைவேற்ற கான்கிரீட் தொட்டிகளில் நீரை நிரப்ப வேண்டும். தீவனம் மற்றும் உணவு தேவைக்கு உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும்.
வனவிலங்குகளிடமிருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க தடுப்பு வேலி அமைக்க விவசாயிகள், வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.