/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.புதுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி ... விறு விறு; கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி முடிக்க திட்டம்
/
எம்.புதுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி ... விறு விறு; கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி முடிக்க திட்டம்
எம்.புதுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி ... விறு விறு; கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி முடிக்க திட்டம்
எம்.புதுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி ... விறு விறு; கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி முடிக்க திட்டம்
ADDED : ஆக 24, 2025 09:40 PM

கடலுார்: கடலுார் அடுத்த எம்.புதுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலுார் நகரம், புதுச்சேரி மாநிலத்தையொட்டி அமைந்துள்ளதால் சராசரியாக தினமும் 60 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டிற்கு தினசரி 650 பஸ்கள் வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் அருகருகே அமைந்திருப்பதால் பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் கடினமாகவும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கலெக்டர் அலுவலகம் அருகே 20 ஏக்கரில் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு அதற்கு பதிலாக கேப்பர் மலையில் உள்ள எம்.புதுாரில் அரசு புறம்போக்கு இடத்தில் (குறிஞ்சிப்பாடி தொகுதி) அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இதையறிந்த ஆளுங்கட்சியோடு உள்ள கூட்டணி கட்சிகளான வி.சி., கட்சி, மா.கம்யூ.,-இந்திய கம்யூ. - ம.தி.மு.க., -மனித நேய மக்கள் கட்சி மற்றும் நகர் நலச்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் பற்றாக்குறை என்றால் அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அந்த இடத்தை பஸ் ஸ்டாண்டிற்காக பயன் படுத்திக் கொள்ளலாம்.
எல்லா ஊர்களிலும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெகு துாரத்தில் உள்ளன.
அதை விட்டுவிட்டு தொலைநோக்கு பார்வையோடு அமைப்பதாக கூறி 7 கி.மீ., துாரத்தை மக்கள் ஆட்டோ போன்ற வாகனத்தில் செலவழித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
கட்டுமான பணிகள் துவங்குவதும், நிறுத்துவதுமாக இழுபறியில் இருந்தது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர் தல் நடக்க உள்ளதால் அதற்குள் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருகிறார் .
அதைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் ஓசையில்லாமல் நடந்து வந்தன.
தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதற்குள் கட்டுமான பணிகளை முடித்து விடலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடலுார் லாரன்ஸ்ரோடு பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த தொகையில் குடிநீர், இருக்கைகள் உள்ளிட்டப் பணிகள் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

