/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் பயணியிடம் நகை திருடிய வாலிபர் கைது
/
ரயில் பயணியிடம் நகை திருடிய வாலிபர் கைது
ADDED : அக் 28, 2025 06:01 AM

விருத்தாசலம்: ரயிலில் பயணம் செய்த பயணியிடம் 2 சவரன் நகைகளை திருடிய வாலிபரை, விருத்தாசலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஓத்தையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, 30; இவர் தனது நண்பர் சரத்குமார் என்பவருடன் கடந்த 26 ம் தேதி இரவு 8:30 மணியளவில் சென்னை எக்மோரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, திருச்சி நோக்கி சென்றுள்ளனர்.
இந்த ரயில் செங்கல்பட்டை தாண்டியவுடன், கருப்பசாமி அசதியில் துாங்கியுள்ளார். பின்னர் விழுப்புரம் தாண்டி விருத்தாசலம் நோக்கி ரயில் வந்தது. அப்போது, கண் விழித்த கருப்புசாமி தான் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட 2 சவரன் நகையை மர்மநபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.
சக பயணிகளிடம் கருப்பசாமி விசாரித்ததில், அருகில் கருப்பு சட்டை அணிந்திருந்த நபர் அமர்ந்திருந்தாக கூறினார். அப்போது, கருப்பு சட்டை அணிந்த நபரை அவர் தேடும்போது, விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் ரயில் நின்றதும், கருப்பு சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்த கருப்பசாமி அந்த நபரை பிடித்து, விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசாரிடம் ஒப்படைத்தார்.அதன்பின், ரயில்வே இருப்பு பாதை சப் இன்ஸ்பெக்டர் சேகர், ரயில்பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, 2 சவரன் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்த பூலாங்குடி, இருப்பு புளியரை பகுதியை சேர்ந்த சுந்தரேசன் மகன் காளிதாஸ், 21; என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர்.
விரைந்து செயல்பட்ட விருத்தாசலம் இருப்பு பாதை போலீசாரை, திருச்சி இருப்புபாதை உட்கோட்ட எஸ்.பி., சக்ரவர்த்தி பாராட்டினார்.

