/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் துணை செயலரைஅடிக்க முயன்ற மாவட்ட செயலரால் பரபரப்பு
/
த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் துணை செயலரைஅடிக்க முயன்ற மாவட்ட செயலரால் பரபரப்பு
த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் துணை செயலரைஅடிக்க முயன்ற மாவட்ட செயலரால் பரபரப்பு
த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் துணை செயலரைஅடிக்க முயன்ற மாவட்ட செயலரால் பரபரப்பு
ADDED : ஏப் 05, 2025 01:40 AM
த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் துணை செயலரைஅடிக்க முயன்ற மாவட்ட செயலரால் பரபரப்பு
தர்மபுரி:தர்மபுரியில் நடந்த, த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் துணை செயலரை அடிக்க கை ஓங்கிய, மாவட்ட செயலரால் பரபரப்பு ஏற்பட்டது.
வக்ப் சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி, தர்மபுரியில் த.வெ.க., சார்பில் மேற்கு மாவட்ட செயலர் சிவா தலைமையில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலர்கள் முருகன், அப்துல், விஜயராணி, மகளிர் அணி மாவட்ட தலைவர் சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, நிர்வாகிகள் தரப்பில் அதிகளவில் கூட்டத்தை கூட்ட வேண்டுமென, மாவட்ட செயலர் சிவா கூறிய நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லை. இதனால் கடுப்பான சிவா, நிர்வாகிகளிடம் தன் கோபத்தை காலை முதலே காட்டினார். ஒரு கட்டத்தில் பென்னாகரம் ஒன்றிய துணை செயலர் பரமசிவத்தை அடிக்க, ஆர்ப்பாட்ட மேடையில் கை ஓங்கினார். இது சக நிர்வாகிகள், தொண்டர்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது. ஒரு தேர்தலை கூட சந்திக்காத நிலையில், நிர்வாகிகள் மீது கோபத்தை காட்டும் மாவட்ட செயலரின் செயல், நிர்வாகிகளிடையே எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, மாவட்ட செயலர் சிவாவிடம் கேட்டபோது, ''எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அண்ணன், தம்பி போல் பழகி வருகிறோம். யாரையும் பணம் கொடுத்து அழைக்கவில்லை. உணர்வால் ஒன்று கூடினர். கூட்டம் குறைவு என்பதெல்லாம் காரணம் இல்லை. சம்பந்தப்பட்ட ஒன்றிய துணை செயலர் பரமசிவத்துக்கு பேச வாய்ப்பளித்த போது, அனைவருக்கும் நன்றி என கூறினார். நன்றி தெரிவிக்க நகர செயலர் சுரேஷ் இருக்கிறார்; நீ ஏன் நன்றி கூறினாய் என, அவரை கண்டித்தேன். அவ்வளவு தான் மற்றபடி, நான் அவரை அடிக்க கை ஓங்கவில்லை,'' என்றார்.