/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நான்கு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
/
நான்கு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 11, 2011 11:55 PM
தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால், பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் காலை 10 மணியில் இருந்து கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர். காலை 10.40 மணி அளவில், நான்கு பெண் குழந்தைகளுடன் வந்த ஒரு பெண், திடீரென கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பொது மக்கள், பெண் தீக்குளிக்க முயன்றதை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மபுரி பிடமனேரியை சேர்ந்த முருகன் மனைவி சரோஜா மற்றும் அவரது குழந்தைகள் என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக, போலீஸில் கொடுத்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க முயன்றது தெரிந்தது. முருகனின் சகோதரி மகன் சக்திவேல், பெண் குழந்தைகளை அடிக்கடி கிண்டல் செய்து வந்தார். இது குறித்து முருகன், சக்திவேலை கண்டித்ததாக தெரிகிறது. சக்திவேல் முருகனின் தம்பி சரவணனிடம் இது குறித்து கூறியுள்ளார். இது குறித்து கேட்ட போது, அண்ணன், தம்பிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் சரவணன், முருகனை அடித்து தாக்கியுள்ளார். இதில், காயம் அடைந்த முருகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சரோஜா தர்மபுரி டவுன் போலீஸில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வெறுப்படைந்த சரோஜா நேற்று கலெக்டர் அலுவலகம் முன், தீக்குளிக்க முயன்றது தெரிந்தது. சரோஜாவை அழைத்து கலெக்டர் லில்லி எச்சரித்தார். மேலும், முருகன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்குமாறு போலீஸாருக்கும், கலெக்டர் லில்லி உத்தரவிட்டார். போலீஸார், சரோஜாவை தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன், தாசில்தார் அலுவலகத்தில் வாரிசு சான்று கிடைக்க தாமதமாவதாகக் கூறி, மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், அரசு துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் நாட்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க, போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.