/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சமரச வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி
/
சமரச வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 08, 2025 01:58 AM
சமரச வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி:தமிழ்நாடு மாநில சமரச மற்றும் இணக்கமுறை மையத்தின் வழிகாட்டுதல்படி, தர்மபுரி மாவட்ட சமரச மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திருமகள் தலைமையில், பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச வாரம் குறித்து, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
பேரணியை தொடங்கி வைத்து, சமரசம் மையம் குறித்து, முதன்மை மாவட்ட நீதிபதி திருமகள் கூறியதாவது:
அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் சமரச மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வழக்குகளை நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வக்கீல்கள் மூலமோ ஆஜராகும் போது, உங்கள் வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப கூறலாம்.
சமரச மையத்தில் நடக்கும் அனைத்து பேச்சு வார்த்தைகளும் ரகசியம் காக்கப்படும். சமரசத்தின் மூலம் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடும் இல்லாமல் விரைவாகவும், இறுதியான சமூக தீர்வு, கட்டணம் ஏதும் இன்றி தீர்வு காணப்படும்.
இதன் மூலம், தங்களது வழக்கு சுமுகமாக தீர்க்கப்பட்டால், நீதிமன்ற கட்டணத்தை உங்களிடம் திருப்பி ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும். சமரசம் ஏற்படவில்லை எனில், உங்கள் வாதத்தை நீதிமன்றத்தின் முன் தொடரலாம். இந்த இலவச சட்ட சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறினார். தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர் அல்லி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், போக்சோ நீதிபதி சிவஞானம், சிறப்பு மாவட்ட நீதிபதி ராஜா, தலைமை குற்றவியல் நீதிபதி அசீன், சமரச மைய வக்கீல்கள் ராஜேந்திரன், அருள்ஜோதி, ஆசியஜோதி, ரமேஷ், ராஜு, பூபதி,
சங்கீதா, அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

