ADDED : ஜூலை 13, 2011 11:54 PM
தர்மபுரி: பென்னாகரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் நடந்து
வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் லில்லி ஆய்வு செய்தார்.
ஒகேனக்கல் அடுத்த
கூத்தப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்மன் கோவில் ஏரியில் மஹாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடந்து வரும் ஏரி ஆழப்படுத்தி,
கரைகள் உயர்த்தும் பணியை பார்வையிட்டார். பணியில் 18 ஆண்கள், பெண்கள் 368
பேர் ஈடுபட்டிருந்தினர். பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் 20 பேர் கொண்ட
குழுக்களாக பிரிந்து பணிகளை செய்து வந்தனர். தொழிலாளர்களிடம் சம்பளம்
வழங்கும் முறை குறித்தும், தினக்கூலியாக எவ்வளவு வழங்கப்படுகிறது என்பது
குறித்து கேட்டறிந்த கலெக்டர் லில்லி, 'அரசு நிர்ணயித்த பணி அளவீடுகளை
முடித்தால் தின கூலி 119 ரூபாய் பெறலாம் எனவும் சம்பளம் வங்கி கணக்கில்
வழங்கப்படும்' என தெரிவித்தார். இண்டூர் அடுத்த கே.அக்ரஹாரம் அரசு உண்டு
உறைவிட நடுநிலைப்பள்ளியை பார்வையிட்ட கலெக்டர் அங்கு இருந்த மாணவிகளிடம்
கல்வி தரம், உணவு வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்குள்ள கழிப்பறைகளை
ஆய்வு செய்து கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தண்ணீர்
வசதிகள் செய்து கொடுக்கவும் அங்கிருந்த ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
வழங்கினார். பென்னாகரம் பஞ்சாயத்து யூனியன் பி.டி.ஓ.,சுந்தரேசன், ஒன்றிய
பொறியாளர் தேவகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வின் போது, உடன் இருந்தனர்.

