ADDED : பிப் 02, 2025 01:28 AM
வத்தல்மலையில் எள் அறுவடை பணி
வத்தல்மலை :வத்தல்மலையில், விளைவிக்கப்படும் உச்சி எள் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அவற்றை உலர வைக்கும் பணியில் விவசாயிகள்
ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில் பெரியூர், சின்னாங்காடு, கொட்லாங்காடு, பால்சிலம்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு, மலை பகுதிக்கு ஏற்ற பயிர்கள் மட்டும் அதிகமாக சாகுபடி செய்கின்றனர். இதில் சில்வர் ஓக், காபி, மிளகு, ராகி, தினை, கடுகு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மலைப்பகுதி என்பதால், எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுவதால், சிறுதானியங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. மேலும் எள் வகைகளில், கறுப்பு எள், வெள்ளை எள் என, 2 வகையும், எண்ணெய் சத்து மிகுந்த, 3வது வகையான உச்சி எள்ளும் உள்ளது. மலைப்பகுதிகளில் மானாவாரியாக தேவைக்கேற்ப விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். உச்சி எள் ஐப்பசி மாதம் விதைத்தால், 3 மாதத்தில் அறுவடைக்கு வரும். தற்போது, அறுவடை பணிகள் நடக்கிறது.
உச்சி எள் பயன்கள் குறித்து, தர்மபுரி வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் கூறியதாவது: உச்சி எள், சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த எண்ணெய் வித்து பயிர். மன்னர் காலத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டது. பாரம்பரிய ரகம், உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக் கூடியது. இந்த எண்ணெயில் கொழுப்பு சத்து குறைவு, நியூட்ரியன்ஸ் அதிகம் என்பதால், அனைவரும் தாராளமாக உச்சி எள் எண்ணெயை உணவில் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யில் லினோலிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம் உள்ளன. இவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அவை சருமத்தை ஊட்டமளிக்கவும் ஹைட்ரேட் செய்யவும் உதவும். விவசாயிகள் இதை பயிரிடுவதற்கான செலவு மிகவும் குறைவு, விதைத்த பின் ஒரு முறை களை எடுத்தால் போதுமானது. நோய் தாக்குதல் இவற்றில் கிடையாது. மலைப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் உச்சி எள் சாகுபடி செய்யலாம். தற்போது புழக்கத்திலுள்ள கறுப்பு மற்றும் வெள்ளை எள், ஒரு கிலோ, 150 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. உச்சி எள் பயிரிடும் விவசாயிகள், அவர்களே பயன்படுத்திக் கொள்வதால், வெளியே இந்த வகை எள் அரிதாகவே கிடைக்கிறது. அதனால், இதன் சந்தை மதிப்பு வெளியில் தெரிவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்