ADDED : மார் 25, 2025 12:47 AM
தனியார் மருத்துவமனை முன் மறியல்
தர்மபுரி:பிரசவத்திற்கு அனுமதித்த கர்ப்பிணி வயிற்றில் இருந்த, 2 சிசுக்கள் பலியாகின. இதனால், தனியார் மருத்துவமனையை கண்டித்து, அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி அடுத்த, ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார், 30. இவர் பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் தொழில் செய்கிறார். இவர் மனைவி நந்தினி, 24. கர்ப்பிணியான அவர், தர்மபுரி சீனிவாசராவ் தெருவிலுள்ள, ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று
வந்தார். கடந்த, 20ல் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், காலை, 8:30 மணிக்கு நந்தினியை, அந்த தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அறுவை சிகிச்சை அரங்கிற்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நந்தினியை அழைத்துச் சென்றனர். பின், 11:30 மணிக்கு நந்தினிக்கு பிரசவத்தில் சிக்கல் உள்ளதாக கூறி, ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்
பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நந்தினி வயிற்றில் இருந்த, 2 சிசுக்களும் இறந்து விட்டதாக கூறினர். பின் இறந்த, 2 ஆண் சிசுக்களை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். உடல்நிலை கடுமையாக பாதித்த நந்தினியை, ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்தனர். சுயநினைவின்றி இருந்த அவர், நேற்று கண் விழித்தார்.
இந்நிலையில், நந்தினியின் வயிற்றில் இருந்த இரட்டை சிசு சாவுக்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நந்தினியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து, அவரது கணவர் அருண்குமார் கூறுகையில், ''நந்தினி கருவுற்று, 5வது மாத பரிசோதனைக்கு வந்தபோது, ஊசி போட்டதும் மயக்கமடைந்தார். அதேபோல், கடந்த வியாழக்கிழமை அறுவை சிகிச்சை அறையில் மீண்டும் அதே ஊசி செலுத்தியபோது, இந்த மருந்தால் ஏற்கனவே பாதிப்பு அதிகமாக இருந்ததால், வேண்டாம் என நந்தினி கூறியுள்ளார்.
அதையும் மீறி மருத்துவர்கள் மருந்தை செலுத்தியதும், நந்தினி மயங்கி, உடல்நிலை மோசமானது. பிரசவத்தில் சிக்கல் உள்ளதாக கூறி, அரசு மருத்துவ
மனையில் சேர்க்க வைத்தனர். எங்களின், இரு குழந்தைகளின் இறப்புக்கும் தனியார் மருத்துவமனையும், அதன் மருத்துவர்களும் தான் காரணம். அவர்கள் மீது சட்டபடி, நடவடிக்கை எடுக்க வேண்டும்,''
என்றார்.தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் வேலுதேவன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.