/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்பூசணி தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு
/
தர்பூசணி தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஏப் 04, 2025 01:07 AM
தர்பூசணி தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில், 1,605 ஏக்கரில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், தர்பூசணி பழங்கள் கண்ணை கவரும் வகையில், இனிப்பு சுவை அதிகரிக்க ரசாயனத்தை ஊசிகளின் மூலம் தோட்டத்திலேயே பழங்களில் செலுத்துவதாக, வீடியோ வைரலானது. இதனால் மக்களிடையே தர்பூசணி வாங்கும் ஆர்வம் குறைந்தது.
இதையடுத்து, தர்மபுரி தோட்டக்கலைத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பழக்கடைகள் மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினர்.
கடந்த, 2 நாட்களாக கடத்துார் அடுத்த பாசாரப்பட்டி, இராணி மூக்கனுாரில் தர்பூசணி தோட்டங்களில், தர்மபுரி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சக்தி, மொரப்பூர் வட்டார உதவி இயக்குனர் ராஜேஷ் கண்ணன், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நந்தகோபால், திருப்பதி உள்ளிட்ட குழுவினர் தர்பூசணி பழங்களை வெட்டி ஆய்வு செய்தனர். இதில், பழங்களில் ஊசி மூலம் ரசாயனம் கலக்கப்படவில்லை, என உறுதி செய்தனர்.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ் கண்ணன் கூறுகையில், ''தர்பூசணி பழங்களில் நிறம் மற்றும் சுவையை அதிகரிக்க, ஊசிகள் மூலம் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக வீடியோ வைரலானது. இதனால் தோட்டங்களில் சாகுபடி செய்துள்ள பழங்களை ஆய்வு செய்தோம். அவ்வாறு எவ்விதமான ரசாயனம் கலக்கப்படவில்லை. தவறாக வதந்தியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து பழங்களை குறைந்த விலைக்கு கேட்கின்றனர். ஆகவே, இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

