/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வரும் 13 வரை தர்மபுரியில் புத்தக திருவிழா
/
வரும் 13 வரை தர்மபுரியில் புத்தக திருவிழா
ADDED : அக் 04, 2024 01:10 AM
வரும் 13 வரை தர்மபுரியில் புத்தக திருவிழா
தர்மபுரி, அக். 4-
தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில், 'தர்மபுரி வாசிக்கிறது' என்ற புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி பங்கேற்றார். இது குறித்து, அவர் கூறியதாவது:
தர்மபுரியில், 6 ம் ஆண்டு புத்தக திருவிழாவை, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் பொது நுாலகத்துறை. தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்துகின்றன. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில், 'தர்மபுரி வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சி, தர்மபுரி அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
இன்று அக்., 4 முதல், 13 வரை பாரதிபுரம் மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில், புத்தக திருவிழா நடக்கிறது. இதில், தமிழக அரசு, 20 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளது. புத்தக திருவிழாவில், 50க்கும் மேற்பட்ட அரங்குகளில், 1,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில், இலக்கியம், அறிவியல், கலை, வரலாறு, அரசியல், சிறுவர் புத்தகங்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளது. மேலும், புத்தக வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள், நுால் அறிமுகங்கள், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, -மாணவியர், மூத்த குடிமக்கள் என அனைவரும், புத்தக திருவிழாவில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில், மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார், நல்லம்பள்ளி பி.டி.ஓ., லோகநாதன், தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.