ADDED : மே 23, 2025 01:35 AM
பென்னாகரம் பென்னாகரம் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த, செவ்வாய்க்கிழமை முதல், ஜமாபந்தி நடந்து வருகிறது. பென்னாகரம், பெரும்பாலை, ஏரியூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட, 4 உள் வட்டங்களுக்கும் ஒவ்வொரு நாளாக, 4 நாட்கள் நடக்கிறது. நேற்று, ஏரியூர் உள்வட்டத்திற்கான ஜமாபந்தியில் முகாமிற்கு, மாவட்ட உதவி ஆணையர் நர்மதா தலைமை வகித்தார். இதில், பட்டா, சிட்டா புதுப்பித்தல், பெயர் மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, விதவை சான்று உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய, 250 மனு பெறப்பட்டது. இதில், தாசில்தார் பிரசன்னமூர்த்தி, துணை தாசில்தார்கள் மாலா, ஆறுமுகம், நாகமாணிக்கம் மற்றும் ஏரியூர் உள் வட்டத்திற்கான வி.ஏ.ஓ.க்கள், ஆர்.ஐ.,க்கள் கலந்து கொண்டனர்.
* அரூர் தாலுகா அலுவலகத்தில், 3வது நாளாக நேற்று ஜமாபந்தி நடந்தது. தர்மபுரி கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். இதில், தீர்த்தமலை வருவாய் உள் வட்டத்திற்கு உட்பட்ட, கிராமங்களை சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனைப்பட்டா, நில அளவை செய்தல், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்று, வருமானச்சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக, 350 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சதீஸிடம் அளித்தனர். இதில், உதவி இயக்குனர் செந்தில்குமார் (நில அளவை), மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.