/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மழைக்கு 13 வீடுகள் சேதம்
/
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மழைக்கு 13 வீடுகள் சேதம்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மழைக்கு 13 வீடுகள் சேதம்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மழைக்கு 13 வீடுகள் சேதம்
ADDED : மே 05, 2024 03:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார், தென்கரைக்கோட்டை, இராமியம்பட்டி பகுதிகளில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றில் பொம்மிடி அடுத்த ரேக்டஹள்ளி, ஓபிளிநாய்க்கனஹள்ளி, கொக்கராபட்டி, தாதனுார், திப்பிரெட்டிஹள்ளி, கந்தன் கவுண்டன் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில், ஒன்பது அட்டை வீடுகள், நான்கு ஓட்டு வீடுகள் என,13 வீடுகள், சுவர் மற்றும் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. சுரக்காய் பட்டியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
திப்பிரெட்டிஹள்ளி, கொண்டகரஹள்ளி, வத்தல் மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. மரங்கள், மரக்கிளைகள் உடைந்து விழுந்ததில், மின் கம்பிகள் அறுந்தன. மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரேகடஹள்ளி, சுரக்காய்பட்டி, திப்பிரெட்டிஹள்ளி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.
* அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் சூறை காற்றுடன் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. சூறை காற்றில் கீரைப்பட்டி, கெளாப்பாறை, அச்சல்வாடி உள்ளிட்ட பகுதிகளில், 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த, 5,000 வாழை மரங்கள் சாய்ந்து சேதமாகின. அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தோட்டக்கலை மற்றும் வேளாண்துறையினர் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.