/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.2,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., சுற்றிவளைப்பு
/
ரூ.2,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., சுற்றிவளைப்பு
ADDED : மே 30, 2024 09:30 PM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கொட்டாபுளியானுாரை சேர்ந்தவர் சுதாகர், 38; மின்வாரிய ஊழியர். இவருக்கு சொந்தமான, 10 சென்ட் விவசாய நிலம், அவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த காவியதர்ஷினி பெயரில், தவறுதலாக பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்தது.
இதை, தன் பெயருக்கு மாற்ற, தர்மபுரி கலெக்டர் மற்றும் விவசாய குறைதீர் கூட்டத்தில் பலமுறை சுதாகர் மனு அளித்தார். அதன்படி, அரூர் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் விசாரித்து சுதாகருக்கு பட்டா மாறுதல் செய்ய உத்தரவிட்டார்.
கடந்த, 28ல் பட்டா மாறுதல் பெற, ஆன்லைனில் சுதாகர் விண்ணப்பித்தார். இதற்கு குருபரஹள்ளி வி.ஏ.ஓ.,வான, அரூர் அருகே பே.தாதம்பட்டியை சேர்ந்த கதிரவன், 40, ஒப்புதல் அளிக்க 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
தர விரும்பாத சுதாகர், தர்மபுரி மாவட்ட லஞ்சு ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று காலை, 11:45 மணிக்கு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 2,000 ரூபாயை சுதாகரிடமிருந்து தென்கரைக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் வைத்து வி.ஏ.ஓ., கதிரவன் பெற்ற போது, மறைந்திருந்த போலீசார் கதிரவனை கைது செய்தனர்.