/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளிப்பு
/
முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளிப்பு
ADDED : ஏப் 20, 2024 08:53 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், முதல்முறை வாக்காளர்கள் கடந்த தேர்தல்களை விட, இந்த லோக்சபா தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.
தமிழகம் முழுவதும், 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 1,805 ஓட்டுச்கசாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில், 32,535 பேர் முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நேற்று ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: வருங்கால இந்தியா, வளர்ச்சி அடைந்த பாரதமாக உருவாக வேண்டும். அதற்காக ஊழல் இல்லாத ஒரு தலைமை இந்தியாவிற்கு தேவை. ஊழல் இல்லாத அரசியல் கட்சியால் மட்டுமே வளமான இந்தியாவை கட்டமைக்க முடியும். இந்தியாவில் தற்போது இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்க வேண்டும்.
அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு முன்னோடியாக, இந்திய திகழ வேண்டும். அதற்கு, ஊழல் இல்லாத ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்க, இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, நாங்கள் இந்த தேர்தலில் ஓட்டு போடுகிறோம். மேலும், இந்த ஓட்டு எங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஓட்டாக பதிவு செய்கிறோம்.இவர்கள் கூறினர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை, 6:30 மணி முதலே, முதல் தலைமுறை வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு ஆர்வத்துடன் ஓட்டுச்சாவடி முன், வரிசையில் காத்திருந்தனர். 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியவுடன் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அதே போல், முதியோர்களும் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.

