ADDED : மார் 30, 2024 03:28 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பாரதிபுரத்தில் உள்ள துாய இருதய ஆண்டவர் பேராலயத்தில், புனித வெள்ளி சிறப்பு சிலுவை பாதை பவனி நடந்தது. இருதய ஆண்டவரின் திருப்பணிகள் முதன்மை குரு அருள்ராஜ், தலைமையில் நடந்தது. இதில், பங்கு இளைஞர்கள் இயேசுவின், 1வது ஸ்தலம் முதல், 14 ஸ்தலம் வரை இயேசுவின் திருப்பாடுகளை நடித்து காட்டினார். தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் சிலுவை பாதை பவனி தொடங்கியது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பாரதிபுரம் புதிய துாய இருதய ஆண்டவர் பேராலயத்தில் இருந்து, தர்மபுரி நான்கு ரோடு அருகே உள்ள, பழைய இருதய ஆண்டவர் பேராலயம் வரை ஊர்வலமாக சென்றனர். இதில் நடந்த ஆராதனையில், கிறிஸ்துராஜ், உதவி பங்கு தந்தை ஆரோக்கிய பிரதீப், குருக்கள், கன்னியர்கள், பங்கு இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* பொம்மிடி, புனித அந்தோனியார் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு பங்கு தந்தை ஆரோக்கியஜேம்ஸ், ஊர் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடந்தது. பங்கு செயலாளர் புஷ்பராஜ், முன்னாள் ஊர் தலைவர் டேனியல் டோமினிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கிறிஸ்தவர்கள் பாட்டு பாடி பிரார்த்தனை செய்தனர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடித்து இழுத்து செல்லப்படும் நிகழ்வை உணர்த்தும் வகையில், பொம்மிடி நகரில் ஊர்வலமாக சென்று புனித அந்தோனியார் ஆலயத்தை அடைந்தனர். சிறப்பு ஆராதனை நடந்தது. இதே போன்று தென்கரை கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, கடத்துார் பகுதிகளில் சிலுவை பாதை வழிபாடு நடந்தது.
* அரூரில் உள்ள, துாய இருதய ஆண்டவர் ஆலயத்தில், புனித வெள்ளியை முன்னிட்டு, சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களை நினைவு கூர்ந்து, அரூர் புனித அன்னாள் துவக்கப்பள்ளியில் இருந்து, நேற்று காலை, 8:00 மணிக்கு பங்குதந்தை ஜான்மைக்கேல், தலைமையாசிரியர் பால் பெனடிக்ட் ஆகியோர் தலைமையில், கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோள்களில் பெரிய சிலுவையை சுமந்து, தங்களை வருத்திக்கொண்டு, துாய இருதய ஆண்டவர் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு, இயேசு சிலுவையில் அறையப்படுவது குறித்து, காட்சி வடிவில் நாடகமாக நடித்து காட்டப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

