/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
/
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
ADDED : மே 18, 2024 12:59 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று பரவலாக மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோடை காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், கோடை மழை பெய்தது. இந்தாண்டு வெப்பத்தின் அளவு வரலாறு காணாத அளவில் இருந்தது. இதில், 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட, 22 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம்
எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று பிற்பகல் முதல் தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, மொரப்பூர், கடத்துார், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தீர்த்தமலை, சித்தேரி உள்ளிட்ட மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னல் இன்றி, 1 மணி நேரம் வரை மிதமான மழை பெய்தது.
நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி தர்மபுரியில், 32 மி.மீ., மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
* தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று மதியம், 2:15 முதல், மாலை, 5:00 மணி வரை அரூர், மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, தொட்டம்பட்டி, ஈச்சம்பாடி, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
இதனால், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. வாச்சாத்தி வனப்பகுதியில் உள்ள ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

