ADDED : ஏப் 30, 2025 01:28 AM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பிரதான குழாயில் பராமரிப்பு பணியால், ஒரு நகராட்சி, 6 பேரூராட்சி, 8 ஒன்றியங்களுக்கு, 2 நாட்கள், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நிறுத்தப்படும்.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில், 600 மி.மீ., விட்ட வார்ப்பிரும்பு பிரதான குடிநீர் குழாயில் பராமரிப்பு பணிகள் மே, 7, 8 ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி நகராட்சி, பென்னாகரம், கடத்துார், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லுார், பி.மல்லாபுரம் ஆகிய பேரூராட்சிகள், ஏரியூர், பென்னாகரம், நல்லம்பள்ளி, தர்மபுரி, கடத்துார், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு, இந்த இரு நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் இந்த இரு நாட்களுக்கு தேவையான, ஒகேனக்கல் குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்தவும். மேலும், உள்ளூர் நீராதாரங்கள் மூலம் பெறப்படும் நீரை, இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.