ADDED : மார் 05, 2024 11:59 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1968 - 69ல், 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களாகவும், பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் அலுவலர்களாகவும், உயர் அதிகாரிகளாவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
இம்மாணவர்கள், 55 ஆண்டுகளுக்கு பின், தாங்கள் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி, தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை கவுரவிக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தங்களுடன் படித்து, தற்போது மறைந்த நண்பர்களுக்கு, மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தங்களுக்கு பாடம் நடத்திய, ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய தலைமையாசிரியர் ஆறுமுகத்திற்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசு வழங்கி கவுரவப்படுத்தினர்.
பள்ளியில் படிக்கும்போது நடந்த சுவாரசியமான சம்பவங்களை, மலரும் நினைவுகளாக நினைவு கூர்ந்தனர். பள்ளி படிப்பிற்கு பின், தாங்கள் கடந்த வந்த பாதை, பணி விபரம், குடும்ப சூழல் குறித்து பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரத்தினம், எழில்மணி, நாகராஜன், மணிமொழி, அன்புமணி, முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

