/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து கொள்ளை முயற்சி
/
டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து கொள்ளை முயற்சி
ADDED : ஆக 28, 2025 01:13 AM
போச்சம்பள்ளி,போச்சம்பள்ளி அருகே, டாஸ்மாக் கடையை மூடி விட்டு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரை வழிமறித்த மர்மநபர்கள், பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அவரிடம் பணம் இல்லாததால், மொபைல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், சந்துார் செல்லும் சாலையில் 2968 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் முருகேசன், 49, என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்த நிலையில் முருகேசன், மது விற்ற பணம், 3.90 லட்சம் ரூபாயை, கடையிலுள்ள லாக்கரில் வைத்து பூட்டி விட்டு, வீட்டிற்கு தன் ஹீரோ ஹோண்டா பேஷன் புரோ பைக்கில், இரவு, 10:15 மணிக்கு புறப்பட்டார்.
குள்ளனுார் பகுதியில், அவரை பின்தொடர்ந்து, கருப்பு நிற காரில் வந்த மர்ம நபர்கள், முருகேசன் சென்ற டூவீலர் மீது மோதியதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த மர்ம நபர்கள், டாஸ்மாக்கில் விற்பனை செய்த பணம் எங்கே எனக்கேட்டு மிரட்டினர்.
அவரிடம் பணம் இல்லாததால், டாஸ்மாக் கடையின் சாவி மற்றும் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது சம்மந்தமாக முருகேசன், போச்சம்பள்ளி போலீசில் அளித்த புகார் படி, போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.