ADDED : ஏப் 24, 2025 01:23 AM
பாப்பிரெட்டிப்பட்டி:-பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திலுள்ள ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
இதை தடுக்க ஆழ்துளை கிணறு உள்ள பகுதிகளில் உறிஞ்சி குழிகள் மற்றும் செங்குத்து உறிஞ்சி குழிகள் அமைத்து கழிவு நீரை வடிகட்டி பூமிக்கு விடப்படுகிறது. அதன்படி கவுண்டம்பட்டியில் மெயின் ரோடு மற்றும் தோளனுார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படாத ஆழ்துளை கிணறுகள், மின்விசை பம்புகள் அருகில் உறுஞ்சி குழிகள் அமைக்க குழி தோண்டப்பட்டது.
ஆனால் குழிகள் தோண்டப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகியும் உறிஞ்சி குழிகள் கட்டப்படவில்லை. சாலையோரம் குழிகள் தோண்டப்பட்டு உள்ளதால், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி உறிஞ்சி குழிகள் அமைக்க எடுக்கப்பட்ட குழிகளில் விழுந்து விபத்துக்குள்ளாகினர். எனவே, விரைந்து பணியை முடிக்க மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து கடந்த, 19ல், நம் 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து விபத்தை தடுக்கும் நோக்கில் கலெக்டர் சதீஷ் உத்தரவின் படி, பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., ஜோதி கணேஷ், துணை பி.டி.ஓ., வேடியப்பன், ஆகியோர் முன்னிலையில், உறிஞ்சி குழிகள் அமைக்க எடுக்கப்பட்ட குழிகளை, ஊராட்சி நிர்வாகத்தினர் மூடினர்.