/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மகப்பேறு மரணம் நடந்தால் உரிமம் ரத்து கலெக்டர் எச்சரிக்கை
/
மகப்பேறு மரணம் நடந்தால் உரிமம் ரத்து கலெக்டர் எச்சரிக்கை
மகப்பேறு மரணம் நடந்தால் உரிமம் ரத்து கலெக்டர் எச்சரிக்கை
மகப்பேறு மரணம் நடந்தால் உரிமம் ரத்து கலெக்டர் எச்சரிக்கை
ADDED : நவ 19, 2024 01:42 AM
மகப்பேறு மரணம் நடந்தால் உரிமம் ரத்து
கலெக்டர் எச்சரிக்கை
தர்மபுரி, நவ. 19-
தர்மபுரி மாவட்டத்தில் மகப்பேறு சிகிச்சை அளிக்கும், 45 மருத்துவமனைகளில், அதன் வசதிகளை பொறுத்து, 3 வகைகளாக தரம் பிரித்து, அரசு உத்தரவிட்டுள்ளதாக, தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இதில், லெவல் - 1 மருத்துவமனை என்பது, அடிப்படை வசதிகள் மற்றும் பிரசவ அறை உள்ள மருத்துவமனை. இதில், அதிக ஆபத்தான நிலையிலுள்ள தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கக் கூடாது. லெவல் - 2- என்பது பிரசவ அறை மற்றும் அறுவை அரங்கு உள்ள மருத்துவமனைகள். இதில், இருதய பாதிப்பு, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், தீவிர நோய் தொற்று, உயர் சர்க்கரை அளவு, மயக்க நிலை, தீவிர நிமோனியா தொற்று, தீவிர டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.,) அனுமதிக்கும் தாய்மார்கள் மற்றும் பிற தீவிர தொற்று ஏற்படும் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கக்கூடாது. லெவல் - 3-ல் பிரசவ அறை, அறுவை அரங்கு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ள மருத்துவமனைகள். இதில், அனைத்து விதமான நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம்.
மாவட்டத்தில் கடந்த ஏப்., 2024 முதல் ஜூலை, 2024 வரை மகப்பேறு மரணங்கள் நிகழவில்லை. ஆக., செப்., அக்., ல் தலா, 2, நவ.,ல், 1 என, மகப்பேறு மரணங்கள் நடந்துள்ளன. மகப்பேறு மரணங்கள் நிகழாமல் தடுக்க, மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதில், குறைந்தளவு ஆபத்தில் இருந்து, அதிக ஆபத்தான நிலைக்கு மாறும் தாய்மார்களை உடனடியாக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்து அனுப்பப்பட்ட தாய்மார்களை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனரா என்பதை உறுதி செய்யவேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், PICME PORTAL-ல் Entry போட்டவுடன், 'வாட்ஸாப்' குரூப்பி-ல் பதிவிட வேண்டும். மாதந்தோறும், 50 பிரசவத்திற்கு மேல் பார்க்கும் மருத்துவனைகளில், ரத்தம் சேமிப்பு மையம் அமைக்க வேண்டும்.
மேலும், 24 மணி நேரமும் இயங்கி வரும், மகப்பேறு மருத்துவமனைகளில், ஒரு மகப்பேறு பணி மருத்துவர் கட்டாயமாக பணியில் இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டால், தமிழ்நாடு மருத்துவமனைகள் முறைப்படுத்துதல் சட்டத்தில், கடும் நடவடிக்கையும், மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரையும் செய்யப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.