ADDED : ஜன 16, 2025 07:17 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், விவசாய தொழிலை மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு தொழிலிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தங்களது வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பசு, எருமை மாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மாட்டு பொங்கலன்று சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்து வழிபடுவது வழக்கம். நேற்று மாட்டு பொங்கலையொட்டி, கால்நடை வளர்க்கும் விவசாயிகள், தங்களது பசு மாடுகளுக்கு, பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து, தீர்த்தம் தெளித்தனர். தொடர்ந்து, பசு மாடுகளுக்கு பொங்கல் மற்றும் தீவனம் வழங்கியும், அருகே உள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கியும் மாட்டு பொங்கலை கொண்டாடினர்.
* கடத்துார், பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, தாளநத்தம், நத்தமேடு, வேப்பிலைப்பட்டி, பையர்நத்தம், மோளையானுார், இராமியம்பட்டி, மஞ்சவாடி, தென்கரைகோட்டை பகுதி விவசாயிகள் தங்களின் கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, வண்ண பொடிகள் பூசி அழகு செய்தனர். பின் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல் கரும்பு, வாழைப்பழத்தை ஊட்டி மகிழ்ந்தனர்.
* அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் நேற்று மாட்டு பொங்கலையொட்டி, மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, புதிதாக, மூக்கணாங் கயிறு மற்றும் அலங்கார கயிறுகளை கட்டியதுடன், அதன் கொம்புகளுக்கு பெயின்ட் மற்றும் உடலின் மீது கலர் பொடிகளை பூசினர். தொடர்ந்து, கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை கட்டி, பொங்கல் வைத்து, குடும்பத்தினருடன் வழிபட்டு, கால்நடைகளுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனர்.
* அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலுள்ள கிராமங்களில் பொங்கலையொட்டி, நேற்று காலையில் இருந்தே, அலங்கார தோரணங்கள், விளையாட்டு போட்டிகள் நடத்த திடல்கள் சீரமைப்பு, பந்தல், மேடை அமைக்கும் பணியில், பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். கபடி, ஓட்டப்பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன், பொங்கல் விழா களை கட்டியது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

