/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொள்ளை, விபத்துகளை தடுக்க எஸ்.பி.,நடவடிக்கை
/
கொள்ளை, விபத்துகளை தடுக்க எஸ்.பி.,நடவடிக்கை
ADDED : செப் 26, 2011 11:45 PM
தர்மபுரி : 'தர்மபுரி மாவட்டத்தில் தொடரும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த அந்தந்த உட்கோட்டங்களில் டி.எஸ்.பி.,க்கள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்' என எஸ்.பி., அமீத்குமார்சிங் உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் தனிப்பிரிவு போலீஸார்களுக்கு எஸ்.பி., அமீத்குமார்சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்ட ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும், முக்கிய வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து சட்டஒழுங்கு பிரச்னைகள் அதிகம் நடக்கும் பகுதிகள், பழைய குற்றவாளிகள் குறித்தும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்குகள் ஆகியவை குறித்து விவரங்களை சேகரித்தார். மாவட்டத்தின் தற்போதைய முக்கிய பிரச்னைகளாக வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், போலீஸார்கள் கடைபிடிக்க வேண்டிய நன்நடைத்தைகள் குறித்து அறிவுறுத்தினார். அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் நடந்த முக்கிய சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்து இன்ஸ்பெக்டர்கள் உடனடி அறிக்கைகள் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அரசியல் தலையீடுகளுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் யாருக்கும் பயப்படாமல், சட்டத்தின் கடமையை செயல்படுத்த வேண்டும் என அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாமூல் வாங்கும் போலீஸார்கள் குறித்து தகவல் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வாகன விபத்துகளை குறைக்க வாகன சோதனை தீவிரப்படுத்த வேண்டும். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிசெல்வது முற்றிலும் தடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.